இதன் ஒரு பகுதியாக சாலைகள்/நெடுஞ்சாலைகள் கட்டுமானத்தில் ஈடுபட்ட/தொடர்புடைய நபர்களின் விவரங்கள் விரைவில் பொதுவில் வெளியிடப்படும் என்று கூறி உள்ளார். மேலும், அனைத்து சாலைத் திட்டங்களும் தரம் மற்றும் விபத்து தரவுகளின் அடிப்படையில் செயல்திறன் தணிக்கைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சாலைகள் தேசிய சொத்துக்கள், அவற்றை அமைப்பவர்கள் அல்லது நிர்வகிப்பவர்கள் பொதுமக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) புது டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த ஸ்மார்ட் சாலைகள் மாநாடு 2025-ல் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “நாடு முழுவதும் சாலைகள் சரியில்லாமல் இருப்பதற்கு நான் ஏன் பழியை ஏற்க வேண்டும்? சாலை ஒப்பந்ததாரர், பொறியாளர் மற்றும் செயலாளர் விவரங்கள் பொதுமக்களுக்கு பகிரங்கமாக வெளியிடப்படும்” என்றார். “ஒப்பந்ததாரர்கள் செய்யும் தவறுகளுக்கு எப்போதும் நான் ஏன் பழியை ஏற்க வேண்டும் என்றும், மோசமான சாலை வேலைகளை ஒப்பந்தம் எடுத்துவிட்டு மோசமாக செயல்படுபவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்” என்றும் கூறினார்.
“அரசு எடுக்க உள்ள நடவடிக்கை காரணமாக அமைச்சர், செயலாளர், ஒப்பந்ததாரர், நிர்வாகப் பொறியாளர் ஆகியோரின் விவரங்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்களை பொதுமக்கள் பெறுவார்கள். இது பொதுமக்களுக்கு விவரங்கள் கிடைக்க வழி செய்யும், மேலும் மோசமான வேலைகளைச் செய்பவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள்” என்று நிதின் கட்கரி கூறினார்.
“ஊடகங்கள் ஏன் எப்போதும் என் மீது பழிசுமத்தி எனது புகைப்படத்தை வெளியிட வேண்டும்? ஒப்பந்ததாரர், செயலாளர் ஆகியோரின் புகைப்படத்தை வெளியிடுங்கள், நான் ஏன் பழியை ஏற்றுக்கொண்டு சமூக ஊடகங்களில் பதிலளிக்க வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பினார். “உள்கட்டமைப்பு மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும், குடிமக்களுக்கு வசதியை உறுதி செய்ய வேண்டும். இதை ஆதரிக்க, பயணிகளுக்கு உணவு, எரிபொருள், ஓய்வறைகள் மற்றும் பார்க்கிங் போன்ற அத்தியாவசிய சேவைகளையும் வசதிகளையும் வழங்கும் 670 சாலையோர வசதிகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன” என்றார்.
“வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பின் மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கும்” என்றார். நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு போக்குவரத்துத் துறை மகத்தான வாய்ப்புகளை அளிக்கிறது.
தற்போது ரூ.55,000 கோடியாக இருக்கும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஆண்டு வருவாய் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ரூ.1.4 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தத் துறையின் மகத்தான வளர்ச்சித் திறனைப் பிரதிபலிக்கிறது என்றார். தவிர, சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாலை கட்டுமானத்தில் 80 லட்சம் டன் பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்துவது மற்றும் சாலை கட்டுமானத்திற்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மீண்டும் பயன்படுத்துவது போன்ற முயற்சிகளை உள்ளடக்கிய 2027ஆம் ஆண்டுக்கான விரிவான உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
25,000 கிலோமீட்டர் நீளமுள்ள இருவழிச் சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான துறைமுக இணைப்புத் திட்டம் அனைத்து முக்கிய துறைமுகங்களையும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கிறது என்றார். குறிப்பாகச் சொன்னால், நாட்டின் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் மூன்று ரூபாய் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குகிறது என்று கூறினார்.
October 29, 2025 8:36 PM IST

