Last Updated:
பிகார் தேர்தலில் ராகுல் காந்தி, முசாபர்பூர் மற்றும் தர்பங்காவில் பரப்புரை தொடங்குகிறார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை பரப்புரை தொடங்குகிறார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் இருகட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி என இரு பிரதான கூட்டணிகள் வலுவாக களம்காண்கின்றன. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி, நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், மகாகத்பந்தன் கூட்டணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை களத்தில் காணவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், முசாபர்பூர் மற்றும் தர்பங்கா மாவட்டங்களில் ராகுல் காந்தி நாளை பரப்புரையைத் தொடங்குவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. வாக்காளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பரப்புரையில் பங்கேற்கவுள்ளனர்.
ஏற்கெனவே, அதிருப்தியை சரிக்கட்டவும், காங்கிரஸ் கட்சிக்கு வியூகம் வகுக்கவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் பிகாரில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை பரப்புரை தொடங்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
October 28, 2025 2:26 PM IST


