Last Updated:
முதல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய பின்னர் ஆட்டத்தை பவுலர்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 147 ரன்களை இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயத்துள்ளது
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் இறுதிப்போட்டி தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
அதிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் அந்த இரு அணிகள் மோதும் இறுதிப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சகிப்சதா ஃபர்கான் 3 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பர்கானும் மற்றொரு தொடக்க வீரர் பகர்ஜமானும் முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பகர் ஜமான் 35 பந்துகளில் தலா 2 சிக்சர் பவுண்டரியுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஏற்படுத்திக் கொடுத்த சிறப்பான அடித்தளத்தை மற்ற பேட்ஸ்மேன்கள் பயன்படுத்த தவறினர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களில் சைம் அயுப் 14 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறத் தொடங்கினர். 10 ஓவர்களுக்குள்ளாக 84 ரன்களை பாகிஸ்தான் கடந்திருந்த நிலையில் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடி ரன் வேகத்தை குறைத்தனர்.
இந்திய அணியின் பவுலர்கள் தொடக்கத்தில் ரன்களை விட்டுக் கொடுத்தாலும் முதல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய பின்னர் ஆட்டத்தை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். குறிப்பாக சூழல் பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சுக்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்ற என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
September 28, 2025 9:52 PM IST


