Last Updated:
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, இந்திய ரயில்வேயில் தொடர்ந்து செய்துவரும் நவீனமயமாக்கலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எடுத்துரைத்துள்ளார்.
புது டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச ரயில் உபகரண கண்காட்சியில் (IREE) இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் வைஷ்ணவ், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் 35,000 கி.மீ. அளவிலான புதிய ரயில்வே இருப்புப் பாதைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், 46,000 கி.மீ. அளவிலான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
“பதவியேற்றதில் இருந்து (11 ஆண்டுகளாக) பிரதமர் நரேந்திர மோடி இந்திய ரயில்வேயை நவீனமயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். இதன் பலன்கள் தற்போது தெளிவாக தெரிகின்றன” என்று வைஷ்ணவ் கூறினார். என்ன பலன்கள் என்று பார்த்தால், “கடந்த 11 ஆண்டுகளில் 35,000 கிலோமீட்டர் புதிய ட்ராக்ஸ் அமைக்கப்பட்டுள்ளன, அதேபோல கடந்த 11 ஆண்டுகளில் இதுவரை சுமார் 46,000 கிலோ மீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன, தவிர 40,000 புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது” என்று அவர் கூறி உள்ளார். இவை அனைத்தும் நம் நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சித் திறனை வெளிப்படுத்துகிறது.
கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் செய்யப்பட்டுள்ள சாதனைகள் அற்புதமானது. இந்திய ரயில்வேயின் இந்த மாற்றம் நவீன காலத்திற்கு ஏற்ற நிலையான மற்றும் பயணிகளுக்கு ஏற்ற போக்குவரத்துக்கான அரசின் நீண்டகால தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கிறது. நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 325 கிலோமீட்டர் தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“பணிகள் நடைபெற்றுவரும் சூரத் மற்றும் மோரா ரயில் நிலையங்களை சமீபத்தில்தான் பார்வையிட்டதாகவும், இவை 2027-ல் துவக்க திட்டமிடப்பட்டுள்ள முதற்கட்ட புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இந்தியா இப்போது 156 வந்தே பாரத் ரயில் சேவைகள், 30 அமிர்த பாரத் ரயில் சேவைகள் மற்றும் 4 நமோ பாரத் ரயில் சேவைகளை இயக்குகிறது, இவை அனைத்துமே ரயில் பயணிகளிடையே மிகவும் பிரபலமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
IREE-ஐ ஏற்பாடு செய்ததற்காக இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII)-க்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் வைஷ்ணவ், உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் ரயில்வே அமைப்புகளின் பங்கேற்பைப் பாராட்டினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்தியா மிகப் பெரிய ரயில்வே மாநாடு மற்றும் கண்காட்சி நடத்த தகுதியானது. தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு முதல் மென்பொருள் மற்றும் அதிவேக நெட்வொர்க்குகள் வரை ரயில் போக்குவரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கி, ஜெர்மனியின் InnoTrans-ஐ விஞ்சும் உலகளாவிய அளவிலான ரயில்வே கண்காட்சியை விரைவில் நடத்த முழுமுயற்சி எடுக்குமாறு CII-ன் இயக்குநர் ஜெனரலை கேட்டுக் கொண்டார்.
October 16, 2025 2:23 PM IST
11 ஆண்டுகளில் 35,000 கி.மீ. புதிய ரயில் பாதைகள், 46,000 கி.மீ. மின்மயமாக்கல்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்


