8 அணிகள் பங்கேற்ற இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
அதிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் அந்த இரு அணிகள் மோதிய இறுதிப்போட்டி நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் சகிப்சதா பர்கான் – பகர் ஜமான் இணை முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. பர்கான் 57 ரன்னிலும், பகர் ஜமான் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சைம் அயுப் 14 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க அதிர்ச்சியாக அமைந்தது. அபிஷேக் சர்மா 5 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்து தடுமாறியது. அடுத்து இணைந்த சஞ்சு சாம்சன் – திலக் வர்மா இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சாம்சன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த திலக் வர்மா – சிவம் துபே இணை 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பொறுப்புடன் விளையாடிய சிவம் துபே 22 பந்துகளில் தலா 2 சிக்சர் பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டபோது திலக் வர்மாவும், ரின்கு சிங்கும் களத்தில் இருந்தனர். இந்த ஓவரை ஹாரிஸ் ரவுப் வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட, அடுத்த பந்தை திலக் வர்மா சிக்சருக்கு அனுப்பினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை 9 ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.
September 29, 2025 12:15 AM IST

