ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வியிடமிருந்து கோப்பையை இந்திய அணி வீரர்கள் வாங்க மறுத்த நிலையில், அவர் கோப்பையை கையோடு எடுத்துச் சென்றது சர்ச்சையாகியுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் போடும் போது, அந்த அணியின் கேப்டனுடன் இந்திய அணி கேப்டன் கைகுலுக்காதது பெரும் சர்ச்சையானது. அந்தப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் இந்திய வீரர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத் திரும்பினர். இந்திய வீரர்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்காக மைதானத்திலேயே காத்திருந்தனர். தாமதத்திற்குக் காரணம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் தாமதமாக வந்தபோது அவர்களுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. சுமார் ஒரு மணி நேரம் கழித்து பரிசளிப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சிறந்த பந்து வீச்சு, ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை இந்திய அணியின் குல்தீப் யாதவ், திலக் வர்மா, அபிஷேக் சர்மா ஆகியோர் விஐபிக்களிடமிருந்து பெற்றனர். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, ரன்னர்களுக்குரிய காசோலையைப் பெற்றார். இந்திய அணிக்குக் கோப்பை என்னவாயிற்று என்ற கேள்வி எழுந்த நிலையில், பரிசளிப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சைமன் டூல், இந்திய அணி தங்கள் கோப்பையை தற்போது பெறப்போவதில்லை என்று அறிவித்ததோடு, பரிசளிப்பு நிகழ்ச்சி முடிந்ததாக அறிவித்தார்.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்துவிட்டது தெரியவந்தது. இதனால், திகைத்துப் போன பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வி, இந்திய அணிக்குரிய ஆசிய கோப்பையை கையோடு தனது அறைக்கு தூக்கி சென்றார். அதே நேரத்தில் கோப்பையே இல்லாமல் வெற்றியை இந்திய வீரர்கள் கொண்டாடினர்.
கடந்த ஆண்டு டி-20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா கோப்பையை கொண்டுவந்தது போல சைகை செய்து சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர். ஆட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கோப்பையைக் கொடுக்காமல் மறுப்பது இதுதான் முதல் முறை என்று காட்டமாகத் தெரிவித்தார்.
கோப்பையை கையோடு எடுத்துச் செல்வதற்கு பாகிஸ்தான் அமைச்சருக்கு உரிமை கிடையாது என்று கூறியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், கோப்பையை விரைவில் இந்தியாவிடம் ஒப்படைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
September 29, 2025 1:42 PM IST
IND vs PAK | “சாம்பியன் அணிக்கு கோப்பையைக் கொடுக்காமல் மறுப்பது இதுதான் முதல் முறை” – பிரஸ் மீட்டில் சூர்யகுமார் யாதவ் காட்டம்!

