Last Updated:
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும் என ஞானேஷ் குமார் அறிவித்தார்.
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வரும் 4-ஆம் தேதி முதல், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது தொடர்பான பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதன்படி, தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பிகாரில் ஏற்கெனவே நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இந்த மாநிலங்களில் பணிகள் நடைபெறவுள்ளன.
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணிகள் நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. பணிகள் முடிந்ததும் டிசம்பர் 9ஆம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் டிசம்பர் 9 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 8 வரை தெரிவிக்கலாம். பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் பிப்ரவரி 7ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம், சேர்ப்பு ஆகிய பணிகள் இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
October 27, 2025 6:12 PM IST
தமிழகத்தில் நவ. 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடக்கம் – தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு


