திமுக நிர்வாகிகளுக்கு என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பயிற்சிக் கூட்டம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு அக்கட்சித் தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவுக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பிகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் மூலம் 65 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டிலும் அதே குறுக்கு வழியைப் பின்பற்ற பாஜக அரசு தனது கைப்பாவையான தேர்தல் ஆணையத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை SIR மூலம், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பாஜகவும் அதன் கூட்டாளியான அதிமுகவும் வெற்றி பெற்றுவிடலாம் எனக் கணக்கு போடுவதாக முதலமைச்சர் ஸ்டாலிம் குற்றஞ்சாட்டினார்.
நேரடியாகத் தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் வலிமையில்லாதவர்கள், மக்களின் வாக்குரிமையைப் பறித்து வெற்றி பெறலாம் எனப் போடும் கணக்கு, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தப்புக்கணக்காகத் தான் ஆகும் என முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.
SIR முறையைக் கைவிடவேண்டும், வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்த வேண்டுமென்றால் அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அதையும் மீறி எடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளைச் சட்டரீதியாக எதிர்கொள்வதுடன், மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை திமுகவிற்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் SIR செயல்பாட்டில் கழகத்தினர் கண்காணிப்பாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் தனது சொந்தக் கட்சி உரிமைகளையே பாஜகவிடம் அடகு வைத்து விட்ட அதிமுக-வுக்கு மக்களின் உரிமைகளை பற்றி கவலைப்பட நேரமிருக்காது எனவும் விமர்சித்துள்ளார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியது திமுக-வும் தோழமைக் கட்சிகளும் தான் எனக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின், மாமல்லபுரத்தில் நடைபெறும் பயிற்சிக் கூட்டத்தில் அனைவரையும் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை 4.15 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஏறத்தாழ 15 மாநிலங்களில் SIR என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்வது குறித்த தேதி மற்றும் எவ்வாறு வாக்காளர் திருத்தப் பணி நடைபெறும் என்பன குறித்து தேர்தல் ஆணையர் அறிவிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
October 27, 2025 7:10 AM IST
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்… இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு

