Last Updated:
வழக்கறிஞர் கிஷோர், பி.ஆர்.கவாய் நோக்கி காலணி வீசிய வழக்கு தீபாவளிக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை நோக்கி வழக்கறிஞர் கிஷோர் தனது காலணியை வீசியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தீபாவளிக்குப் பிறகு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதிகள் சூர்யகாந்த் (Surya Kant), ஜாய்மாலா பக்சி (Joymalya Bagchi) அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
அப்போது நீதிபதிகள், காலணி எறிந்த நபர் ஒரு பொறுப்பற்ற குடிமகன் என்று தாம் கருதுவதாக தலைமை நீதிபதியே கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் எனவே இந்த விவகாரத்தில் கூடுதலாக பேச வேண்டியது இல்லை எனவும் தெரிவித்தனர். அவ்வாறு பேசுவதும் வீண் கால விரயத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது என்றும் கூறினர்.
இந்த விவகாரம் சிலரால் போற்றப்படுவதாகவும், சிலரால் கண்டிக்கப்படுவதாகவும் கூறிய வழக்கறிஞர்கள், நீதிமன்றம் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தங்களுடைய கருத்தாக உள்ளதாக தெரிவித்தனர். அதற்கு நீதிபதிகள், இந்த சம்பவம் தொடர்பாக பேசி தற்போது 5 அல்லது 10 நிமிடங்களை வீணடித்துக் கொண்டிருப்பதாகக் கூறினர்.
நீதித்துறையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே பார்க்க வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் Tushar Mehta தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிமினல் அவமதிப்பு வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பின் விசாரிக்கலாம் என தெரிவித்தனர்.
October 16, 2025 7:16 PM IST


