Last Updated:
போபாலில் பணம் செலுத்துவது தொடர்பான தகராறு வன்முறையாக மாறி, 50க்கும் மேற்பட்ட பிளிங்கிட் டெலிவரி பணியாளர்கள் ஒரு வீட்டில் புகுந்து அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போபாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான பிளிங்கிட்-ஐ சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட டெலிவரி பணியாளர்கள், ஒரு குடியிருப்பில் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் டேனிஷ் ஹில்ஸ் காலனியில் நடந்ததாக தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த பிரச்சனை, ஒரு வாடிக்கையாளருக்கும், டெலிவரி பணியாளருக்கும் இடையே ஆர்டரைப் பெறுதல் மற்றும் பணம் செலுத்தல் தொடர்பான சிறிய தகராறாகத் தொடங்கியது. ஆனால், சில நிமிடங்களிலேயே அது வன்முறையாக மாறி, பலர் காயமடையும் அளவுக்கு வளர்ந்தது.
சாட்சிகளின் கூற்றுப்படி, அந்த தகராறுக்குப் பிறகு சுமார் 60 பிளிங்கிட் டெலிவரி பணியாளர்கள் ஒரே நேரத்தில் அங்கு கூடி, கோஷங்கள் எழுப்பி, உள்ளூர்வாசிகளுடன் மோதிக்கொண்டனர். சண்டை வேகமாக பரவியதால் நிலைமை கைமீறியது. மேலும், இந்த சம்பவத்தில் சில பெண்கள் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும், சிலரின் ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இந்த அதிர்ச்சியான தாக்குதலுக்குப் பிறகு, டேனிஷ் ஹில்ஸ் காலனியின் குடியிருப்பாளர்கள் கோலார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், அந்தப் பகுதிக்கு வெளியே இருந்துவந்த பல டெலிவரி பணியாளர்களும் இதில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, பிளிங்கிட் நிறுவனத்தின் பெயரை மீண்டும் சர்ச்சையில் ஆழ்த்தும் மற்றொரு சம்பவமும் கடந்த வாரம் நிகழ்ந்தது. தனது வீட்டிற்கு டெலிவரி செய்ய வந்த பிளிங்கிட் டெலிவரி பார்ட்னர் தன்னை “தகாத முறையில்” தொட்டதாக பெண் வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். அவர் அந்தச் சம்பவத்துக்கான சிசிடிவி காட்சியையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, “இது ஏற்றுக்கொள்ள முடியாதது, பிளிங்கிட் நிறுவனம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டார்.
October 16, 2025 7:35 PM IST


