Last Updated:
இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ள நிலையில் இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக ஜான் கேம்ப்பல் மற்றும் சந்திரபால் களம் இறங்கினர். சந்திரபால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேம்ப்பல் 8 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்தவர்களில் ஆலிக் அதானாஸ் 12 ரன்களும், பிராண்டன் கிங் 13 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ரோஸ்டன் சேஸ் 24 ரன்னில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 26 ரன்களும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்களும் எடுத்தனர். 44.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களம் இறங்கினர்.
இருவரும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜெய்ஸ்வால் 36 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சாய் சுதர்சன் 7 ரன்னில் வெளியேறினார்.
இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 121 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீசை விடவும் இந்திய அணி 41 ரன்கள் பின் தங்கியுள்ளது. இருப்பினும் 8 விக்கெட்டுகள் கைவசம் இருப்பதால் நாளைய 2 ஆம் நாள் ஆட்டத்தில் பெரிய ஸ்கோரை இந்திய அணி எட்டுவதற்கு வாய்ப்புள்ளது.
October 02, 2025 5:59 PM IST


