Last Updated:
நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி நகை, காயின்கள் அல்லது பார்களை விற்பனை செய்யும் போது உங்களுக்கு கிடைக்கக்கூடிய லாபமானது மூலதன லாபமாக கருதப்படுகிறது.
கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது தங்கத்தின் விலையானது கிட்டத்தட்ட 60% அதிகரித்துள்ளது. அதேபோல வெள்ளி இரண்டு மடங்காக விலை உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பல முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் பிற சொத்து பிரிவுகளைப் போலவே தங்கத்திற்கும் வரி பொருந்துகிறது.
நீங்கள் காயின்கள் அல்லது பார், நகை போன்ற திட வழிகளில் தங்கத்தை வாங்கினாலும் சரி அல்லது ஆவணம் மற்றும் டிஜிட்டல் முறைகளான எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் (ETFகள்) சாவரின் கோல்ட் பாண்ட் (SGB) போன்றவற்றை வாங்கினாலும் சரி உங்களுடைய லாபத்திற்கு நீங்கள் கட்டாயமாக வரி செலுத்த வேண்டும். எனவே இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் இப்போது தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி நகை, காயின்கள் அல்லது பார்களை விற்பனை செய்யும் போது உங்களுக்கு கிடைக்கக்கூடிய லாபமானது மூலதன லாபமாக கருதப்படுகிறது. இதற்கான வரி என்பது உரிமை காலத்தை பொறுத்து அமையும். குறுகிய கால மூலதன லாபம் அதாவது 24 மாதங்களுக்கும் குறைவாக தங்கத்தை வைத்திருந்து அதன் மூலமாக நீங்கள் பெறும் ரிட்டன்கள் இந்த பிரிவின் கீழ் வரும். 24 மாதங்களுக்கு பிறகு உங்களுடைய தங்கத்தை விற்பனை செய்யும் போது அது நீண்ட கால மூலதன லாபத்தின் கீழ் வருகிறது. இதற்கு 12.5% வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால் ஜூலை 23, 2024-க்கு முன்பு வாங்கிய தங்கத்திற்கு 20 சதவீத வரியை செலுத்த வேண்டும்.
தங்கம் மற்றும் வெள்ளி எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் வரி காரணங்களுக்கு திட வடிவமாக கருதப்படுகிறது. இதற்கான லாபம் குறுகிய காலதாய் இருக்கும் போது உங்களுடைய வருமான வரி வரம்பின் அடிப்படையில் அதற்கான வரியை செலுத்த வேண்டும். 24 மாதங்களுக்கு மேல் தங்கத்தை வைத்திருந்து அதன் பிறகு நீங்கள் அதை விற்பனை செய்யும் போது 12.5 சதவீத வரி செலுத்த வேண்டும்.
SGBகளுக்கான வரி என்பது உங்களுடைய வருமான வரி வரம்பின் அடிப்படையில் “பிற மூலங்களில் இருந்து வந்த வருமானம்” என்பதன் கீழ் வரிக்கு உட்படுத்தப்படுகிறது. ஒருவேளை பத்திரங்களை நீங்கள் மெச்சூரிட்டி வரை அதாவது 8 வருடங்கள் வரை வைத்திருக்கும் போது அதன் மூலமாக வரும் லாபத்திற்கு நீங்கள் எந்த விதமான வரியும் செலுத்த வேண்டாம். ஆனால் உங்களுடைய பத்திரங்களை நீங்கள் 5வது வருடத்திற்கு பிறகு ரெடீம் செய்து கொண்டாலோ அல்லது செகண்டரி மார்க்கெட்டில் விற்பனை செய்தாலோ அதற்கு 12.5% வட்டி பொருந்தும்.
24 மாதங்களுக்கும் குறைவாக வைத்திருக்கும் டிஜிட்டல் தங்கம் மற்றும் வெள்ளிக்கு வருமான வரி வரம்பின் அடிப்படையில் வரி வசூலிக்கப்படும். 24 மாதங்களுக்கு மேல் 12.5% வரி செலுத்த வேண்டும்.
ஒரே நிதியாண்டில் 50 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான மதிப்பிலான தங்கம் அல்லது வெள்ளியை நீங்கள் விற்பனை செய்தால் அதற்கு 1% TDS பிடித்தம் செய்யப்படும். ஜூலை 1, 2021 முதல் இருந்து 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான தங்கத்தை ரொக்கமாக கொடுத்து நீங்கள் வாங்கும்போது அதற்கு 1% TDS அல்லது TCS வசூலிக்கப்படும். மேலும் இதற்கு PAN மற்றும் ஆதார் விவரங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.
தங்கம் அல்லது வெள்ளியை நீங்கள் பரிசாக பெறும் போது ஒரு நிதியாண்டில் அதற்கான மதிப்பு 50,000 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும். இதுவே உங்களுடைய உறவினர் அல்லது திருமணம் போன்ற நிகழ்வின்போது நீங்கள் பெறும் தங்கத்திற்கு எந்த விதமான வரியும் செலுத்த வேண்டாம். வாரிசு ரீதியாக பெறும் தங்கம் அல்லது வெள்ளிக்கு வரி செலுத்த தேவையில்லை. ஆனால் அதனை பின்னர் நீங்கள் விற்பனை செய்யும் போது மூலதன லாபத்தின் அடிப்படையில் வரி செலுத்த வேண்டி இருக்கும்.
October 25, 2025 6:50 PM IST


