Last Updated:
ஆந்திராவில் இருசக்கர வாகனம் மோதி பேருந்து எரிந்து 20 பேர் பலியான சம்பவத்தில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் செய்த அதிர்ச்சி செயல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்து 20 பேர் பலியான விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று மரணமடைந்த சிவசங்கர், விபத்துக்கு சிறிது நேரம் முன்பு செய்த அதிர்ச்சிகரமான காரியம் தொடர்பான சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி 41 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அதிகாலை 3.30 மணியளவில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தெக்கூர் என்ற கிராமம் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் ஒன்று பேருந்து மீது மோதி அதன் அடியில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்தது. என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ, கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் மளமளவென பரவியது.
தீப்பற்றியதை உணர்ந்த பயணிகள் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பேருந்தில் இருந்து வெளியேறியுள்ளனர். அந்த வகையில் 10-க்கும் மேற்பட்டோர் லேசான தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால், அதிவேகமாக தீ பரவி பேருந்து முழுவதும் எரியத் தொடங்கியதால் பலர் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதில் 20 பேர் வரை பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனம் குறித்த தகவல்களை சேகரித்தனர். அப்போது, பேருந்து மீது மோதிய இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவர் சிவசங்கர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்படி விபத்து நடந்த பகுதிக்கு அருகே இருந்த ஒரு பெட்ரோல் பங்கின் சிசிடிவியை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, விபத்துக்கு காரணமான இருசக்கர வாகனத்தில் பயணித்து மரணமடைந்த இளைஞர் சிவசங்கர் விபத்து நடப்பதற்கு சிறிது நேரம் முன்பு பெட்ரோல் பங்கில் தனது நண்பருடன் சேர்ந்து பெட்ரோல் நிரப்ப வந்தது சிசிடிவியில் பதிவானது.
அந்த பெட்ரோல் பங்கில் யாரும் இல்லாததால் பெட்ரோல் நிரப்பாமலேயே அவர்கள் திரும்பி சென்றுள்ளனர். அப்போது, சிவசங்கரின் நண்பர் போதையில் தள்ளாடியபடி வாகனத்தை எடுத்துச் சென்ற காட்சி வெளியாகி உள்ளது.
அதன்பின் என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் சிவசங்கர் மட்டும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சென்று இடையில் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். சிவசங்கரின் நண்பர் யார்? அவர் எங்கே சென்றார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
October 25, 2025 4:26 PM IST


