தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் பிரசாந்த் கிஷோர். ‘ஜன் சுராஜ் அபியான்’ என்ற இயக்கத்தை நடத்தி வந்த பிரசாந்த் கிஷோர், அதனை கடந்த ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த தினத்தன்று அரசியல் கட்சியாக மாற்றி ஜன் சுராஜ் எனப் பெயரிட்டார்.
தொடங்கப்பட்ட ஒரே மாதத்தில், பிகாரில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டது ஜன் சுராஜ். 4 தொகுதிகளில் போட்டியிட்டு சராசரியாக 10 சதவிகித வாக்குகளைப் பெற்றது. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில், 243 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என ஏற்கெனவே அறிவித்துவிட்டார் பிரசாந்த் கிஷோர்.
ஜன் சுராஜ் கட்சி, குறைந்தது 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 150-திற்கும் குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்றால், அது தோல்வியாகவே கருதப்படும் எனவும் அதிரடியாகக் கூறியுள்ளார்.
பிகாரின் பாரம்பரியமான சாதி அடிப்படையிலான அரசியலை விட்டு விலகி, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வளர்ச்சி ஆகிய பிரச்சினைகளை முன்வைத்து ஜன் சுராஜ் கட்சி பரப்புரை செய்கிறது. இது, படித்த இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய மாற்றத்திற்கான அடித்தளமாக இருக்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அரசியல் பின்னணி இல்லாத, கல்வியாளர்கள், மருத்துவர்கள், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற பிரமுகர்களை, பிரசாந்த் கிஷோர் வேட்பாளர்களாக அறிவித்துள்ளார். இந்த அணுகுமுறை, Clean Politics என்ற நேர்மறை பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. பிகார் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்ட பிரசாந்த் கிஷோர், மக்களை நேரடியாகச் சந்தித்து, கட்சியின் கொள்கைகளை விளக்கியுள்ளார்.
அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், பிரசாந்த் கிஷோர் மிகவும் விருப்பமான முதலமைச்சர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்தில் தேஜஸ்வி யாதவ் உள்ளார். பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் ஜன் சுராஜ் கட்சியை ‘வாக்குப் பிரிக்கும் காரணியாக’ மட்டுமே பார்க்கின்றனர்.
தனித்து ஆட்சியைப் பிடிப்பதற்குப் பதிலாக, NDA மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குகளைப் பிரித்து, சிறிய வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்யும் ஒரு சக்தியாக ஜன் சுராஜ் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
உயர் சாதியினர், நகர்ப்புற வாக்காளர்கள் மற்றும் நிதிஷ் குமாரின் கூட்டணி மீது அதிருப்தி கொண்டோரின் வாக்குகளைப் பிரித்து, இந்தியா கூட்டணிக்கு சிக்கலை பிரசாந்த் கிஷோர் ஏற்படுத்தக்கூடும். இதேப்போல் முஸ்லிம்-யாதவ் தவிர்த்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைப் பிரித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் ஜன் சுராஜ் கட்சி 10 சதவிகித வாக்குகள் வரை பெறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறிப்பாக இந்தியா கூட்டணிக்கே பாதிப்பாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 சட்டமன்றத் தேர்தலில் 3,500 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் 40 தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது இந்தியா கூட்டணி. ஹில்சா சட்டமன்றத் தொகுதியில் 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பறி கொடுத்தார் இந்தியா கூட்டணி வேட்பாளர் சக்தி சிங் யாதவ்.
எனவே ஜன் சுராஜ் கட்சி தனியாக ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு உறுதியான பலத்தைப் பெற்றிருக்காவிட்டாலும், இரு பெரிய கூட்டணிகளின் வெற்றி வாய்ப்புகளை மாற்றியமைக்கும் திறன் கொண்ட காரணியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
October 24, 2025 10:17 PM IST
Bihar Election: வாக்குகள் அறுவடையா.. பிரிப்பா? பிகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோருக்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது

