Last Updated:
காசா போர் சூழலில், ஹம்தான் ஹதாத் தம்பதி புதிதாகப் பிறந்த மகளுக்கு “சிங்கப்பூர்” என பெயர் சூட்டி, Love Aid Singapore அமைப்புக்கு நன்றி தெரிவித்தனர்.
காசாவில் போர் பதற்றத்துக்கு நடுவே, தங்களுக்கு உணவளித்த சிங்கப்பூருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, சிங்கப்பூர் என பெயர் சூட்டியுள்ளது பலரையும் நெகிழச் செய்துள்ளது.
போரால் சிதைந்த காசாவில், நன்றி மற்றும் நம்பிக்கையின் உருவமாய் வெளிப்பட்டுள்ள ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பலரின் மனங்களை வென்றுள்ளது. காசா போர் பதற்றத்துக்கு நடுவே தொடர்ந்து உணவு வழங்கி உதவிய “லவ் எய்ட் சிங்கப்பூர்” என்கிற தொண்டு நிறுவனத்திற்கும், அந்த அமைப்பின் தாய்நாடான சிங்கப்பூருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒரு பாலஸ்தீன தம்பதி, புதிதாகப் பிறந்த தங்களது மகளுக்கு “சிங்கப்பூர்” என்று பெயரிட்டுள்ளனர்.
அக்டோபர் 16 அன்று பிறந்த இந்த குழந்தை, அந்தப் பெயரைக் கொண்டுள்ள முதல் பாலஸ்தீனக் குழந்தையாகக் கருதப்படுகிறார். அவரது தந்தை ஹம்தான் ஹதாத், லவ் எய்ட் சிங்கப்பூர் நடத்தும் சூப் கிச்சன்களில் ஒன்றில் சமையல்காரராகப் பணியாற்றுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த அமைப்பு காசாவின் போர் மற்றும் முற்றுகையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு உணவை வழங்கி வருகிறது.
இந்த அறக்கட்டளையின் நிறுவனர் கில்பர்ட் கோ பகிர்ந்த வீடியோவில் பேசிய ஹம்தான், தனது மனைவியின் கர்ப்ப காலத்திலும் அன்றாட உணவுக்காக அந்த சமையலறையின் உதவியையே தான் நம்பியிருந்ததாகக் கூறினார். புதிதாகப் பிறந்த மகளைத் தொட்டபடி அவர், “இவளை நான் மிகவும் நேசிக்கிறேன். அதனால் அவளுக்கு சிங்கப்பூர் என்று பெயர் வைக்க விரும்புகிறேன்” என்று உருக்கமாகச் சொன்னார்.
லவ் எய்ட் சிங்கப்பூர், குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் படத்தையும் பகிர்ந்து, அந்த பெயரை உறுதிப்படுத்தியது. இன்ஸ்டாகிராம் பதிவில் அவர்கள், “இந்தப் பெயர், உதவி செய்பவர்களுக்கும் அவ்வதவியை நம்பி வாழும் குடும்பங்களுக்கும் இடையிலான அற்புதமான மனிதாபிமான பிணைப்பை பிரதிபலிக்கிறது” எனக் குறிப்பிட்டனர்.
மேலும் அந்த அமைப்பு, “புதிதாக பிறந்த இந்த குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து, விரைவில் ஒரு அமைதியான உலகம் அவளை வரவேற்கட்டும்” என்றும், தங்களது பணி “இனம், மதம், எல்லைகளைத் தாண்டியது” என்றும் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் மக்களின் தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் செய்தி வெளிவந்ததும், சமூக வலைதளங்களில் உலகளவில் வைரலாகத் தொடங்கியது. குறிப்பாக, சிங்கப்பூர் மக்களிடையே பெரிதாக வரவேற்கப்பட்ட இந்த வீடியோ, பலரையும் கலங்க வைத்தது. அதன்படி சிங்கப்பூர் பயனர் ஒருவர் எழுதிய உணர்ச்சிப்பூர்வமான கருத்தில், “இதற்காகத் தான் நான் காலையில் அழுதிருக்கிறேன். மாஷா அல்லாஹ்! யா அல்லாஹ், இந்த சிறிய மிஸ் சிங்கப்பூரைப் பாதுகாக்கவும்” என்று குறிப்பிட்டார்.
October 24, 2025 7:17 PM IST


