Last Updated:
மந்த்சௌர் மாவட்ட அரசுக் கல்லூரியில் ABVP தலைவர்கள் உமேஷ் ஜோஷி, அஜய் கவுர், ஹிமான்ஷு பைராகி கைது செய்யப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவிகள் உடை மாற்றுவதை ரகசியமாக படம்பிடித்த ABVP தலைவர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மேற்கு மந்த்சௌர் மாவட்டத்தில், அரசுக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற இருந்த இளைஞர் விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது கல்லூரியில் மாணவிகள் உடைமாற்றும் அறையில் திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே கல்லூரி முதல்வர் அங்கு சென்று விசாரித்தபோது, அறையிலிருந்த வெண்டிலேட்டர் வழியாக மாணவர்கள் யாரோ செல்போன் மூலம் வீடியோ எடுத்தது போன்று இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
உடனே கல்லூரி முதல்வர் பிரதிசர்மா சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சுமார் 4 பேர் அறைக்க வெளிப்புறமாக நின்றபடி செல்போன் மூலம் வெண்டிலேட்டர் வழியாக வீடியோ எடுக்க முயன்றது பதிவாகியிருந்தது. இதுகுறித்து உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரைப் பெற்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து 4 பேரின் அடையாளங்களை கண்டுபிடித்தனர். உடனே களத்தில் இறங்கிய போலீசார் 4 பேரில் மூவரை கைது செய்தனர்.
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, கைது செய்யப்பட்ட மூவரும் ஏ.பி.வி.பி தலைவர்கள் என்பது தெரியவந்தது. ஏ.பி.வி.பியின் உள்ளூர் செயலாளர் உமேஷ் ஜோஷி, இணைப் பொறுப்பாளர் அஜய் கவுர் மற்றும் மாணவர் அமைப்பின் நிர்வாகி ஹிமான்ஷு பைராகி ஆகியோர் கைதாகியிருப்பது தெரியவிந்தது. கைது செய்யப்பட்ட மூன்று மாணவர் தலைவர்களும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை போலீசார் தடயவியல் பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். கல்லூரி வளாகத்தில் ABVP தலைவர்கள் செய்த செயல் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
October 17, 2025 5:57 PM IST


