243 தொகுதிகள் கொண்ட பிகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், 6ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும், 11ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் 122 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தே.ஜ.கூ: பிகாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் ஜெடியு ஆகிய இரு கட்சிகளும் சரிசமமாக 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதேபோல், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி 29 தொகுதிகளிலும், உபேந்திர குஷ்வாகா தலைமையிலான ராஷ்டிரிய லோக் மோர்ச்சா, ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகியவை தலா 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
மகாகத்பந்தன் (இந்தியா கூட்டணி): வேட்புமனு தாக்கலின் இறுதி நாள் வரை நடந்த தொகுதி பங்கீட்டில் முடிவு எட்டப்படாமல், இறுதியில் ராஷ்டிரிய ஜனதாதளம் 143 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 61 தொகுதிகளுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளும், இதர கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தன.
இந்தியா கூட்டணி: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலேயே சுமுகமான முடிவு எட்டப்படாத நிலையில், இந்தியா கூட்டணி முதலமைச்சர் யார் எனும் கேள்வி பெரிதாக எழுந்தது. இந்நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆர்.ஜெ.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேபோல், கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சியான விகாஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானி துணை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தே.ஜ.கூ: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் என்.டி.ஏ. கூட்டணி வென்று ஆட்சி அமைத்தால் மீண்டும் நிதிஷ்குமார் முதலமைச்சராக்கப்படுவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “யார் முதலமைச்சர் என தேர்வு செய்வதற்கு நான் யார்? கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. எனவே தேர்தலுக்கு பிறகு சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூடி பேசி முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். அதேபோல், தே.ஜ.கூ. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
நிதிஷ் முதல்வர் கிடையாது: முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த தேஜஸ்வி யாதவ், “முதலமைச்சர் வேட்பாளர் குறித்தான விவகாரத்தில் எங்களுக்கு எந்த குழப்பமும் கிடையாது; தெளிவாக இருக்கிறோம். ஆனால், தே.ஜ.கூ முகம் யார் என்பது தான் தற்போது கேள்வி.
தற்போதுவரை அவர்கள் தரப்பில் இருந்து ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பும் நடைபெறவில்லை. அவர்களின் தொலைநோக்கு பார்வையையோ, குறிக்கோளையோ தெரிவிக்கவில்லை. மேலும், முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவி கிடையாது என்பதை அமித்ஷாவின் கருத்து தெளிவுபடுத்தியுள்ளது.
தேர்தலுக்கு பிறகு சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூடி முடிவெடுப்போம் என அவர் தெளிவாக சொல்லிவிட்டார். நிதிஷ் குமார் முதலமைச்சராக வருவதை பாஜக விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். மேலும், “முகேஷ் சஹானி மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர். அவரைத் தவிர, மற்ற துணை முதலமைச்சர்களும் இருப்பார்கள்” எனவும் தெரிவித்தார்.
October 23, 2025 3:58 PM IST

