Last Updated:
தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும் தான் காரணம் என ஆர்.ஜே.டி. வேட்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதாதளம் வேட்பாளர் சுவேதா சுமன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும் தான் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி 6ஆம் தேதி முதற்கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும், 11ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலில் 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இரண்டு கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். ஐக்கிய ஜனதாதளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
இதன் காரணமாக சில இடங்களில் கூட்டணி கட்சியான காங்கிரஸூம், ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய இரு கட்சிகளும் எதிர் எதிர் முனையில் போட்டியிடுகின்றன. இதுபோக வாய்ப்பு எதிர்பார்த்திருந்த சிலருக்கு சீட் கொடுக்காததை அடுத்து, அவர்கள் கட்சியை எதிர்த்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், மோஹானியா சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த சுவேதா சுமன் என்பவரின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா என சுவேதா சுமன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வேட்புமனு நிராகரித்த தேர்தல் ஆணையம் அறிவித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுவேதா சுமன், “டெல்லியில் இருந்து கொடுக்கப்பட்ட தொடர் அழுத்தத்தின் காரணமாக என் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் தங்களுக்கு வேறு வழி இல்லை எனத் தெரிவித்தனர். பாஜக, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தான் அழுத்தம் கொடுக்கின்றனர். அவர்களைத் தவிர வேறு யார் அழுத்தம் கொடுக்க முடியும்?
இதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சங்கீதா, அவரது சாதி சான்றிதழை காலம் தாழ்த்தி 13ஆம் தேதி தான் சமர்ப்பித்தார். ஆனால், அவரது வேட்பு மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார். மேலும், வேட்புமனு நிராகரிப்பு செய்தி கேட்டு அவர் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கண்ணீர் விட்டபடி வெளியே வந்தார்.
October 22, 2025 7:26 PM IST
“மோடி கொடுத்த அழுத்தத்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது” – கண்ணீருடன் ஆர்.ஜே.டி வேட்பாளர் குற்றச்சாட்டு


