Last Updated:
Yashasvi Jaiswal : குறைந்த வயதில் டெஸ்டில் 7 சதங்களை அடித்த இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் விராட் கோலி, சுனில் கவாஸ்கரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்து வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை நிதானமான தொடக்கத்தை கொடுத்தது. ராகுல் 54 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த சாய் சுதர்சன் மற்றும் ஜெய்ஸ்வால் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 243 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சாய் சுதர்சன் 165 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 87 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதத்தை கடந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 253 பந்துகளில் 173 ரன்கள் எடுத்துள்ளார்.
இது டெஸ்ட் போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளாசியுள்ள 7 ஆவது சதமாகும். இதன் மூலம் குறைந்த வயதில் டெஸ்டில் 7 சதங்களை அடித்த இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் விராட் கோலி, சுனில் கவாஸ்கரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
ஜெய்ஸ்வாலிடமிருந்து இன்னொரு பெரிய ஸ்கோர் வந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மிகச்சிறந்த இடது கை ஓபனிங் பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் உள்ளார். அவர் அடித்துள்ள ரன்கள் அதனை நிரூபிக்கின்றன என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று பல முன்னணி விமர்சகர்களும் ஜெய்ஸ்வாலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
October 10, 2025 6:57 PM IST


