பரஸ்பர எச்சரிக்கை விடுக்கும் நாடுகள்:
அதேசமயம், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இரானுக்கு கடும் கண்டனத்தையும், இஸ்ரேலுக்கான ஆதரவையும் தெரிவித்திருக்கின்றன. இதுகுறித்து பதிலளித்திருக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இரான் தயாராகியிருக்கிறது. அதேசமயம் நாங்களும் எங்களின் தற்காப்புக்காக எல்லாவிதமான பதிலடிக்கும் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு கெடுதல் செய்பவர்களுக்கு நாங்களும் கெடுதல் செய்வோம். எங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் துணை நிற்கின்றன” எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், இரான் ராணுவத் தளபதி முகமது பாகேரி, “இஸ்ரேல் மீதான எங்களின் தாக்குதல் என்பது, சிரியாவில் இரான் தூதரகம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கான பதிலடியே. எங்களின் தற்காப்புக்காக நாங்களும் தாக்குதல் நடத்தினோம். இந்தத் தாக்குதலை நாங்கள் இனியும் நீட்டிக்க விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் எங்களை மீண்டும் தாக்கினால் அதற்காக நாங்கள் கொடுக்கும் பதிலடி இதைவிடப் பெரிதாக இருக்கும். இஸ்ரேலுக்கு ஆதரவாக குறுக்கே அமெரிக்கா வந்தாலும் அவர்களுக்கான பதிலடியைக் கொடுப்போம்!” என எச்சரிக்கை விடுத்தியிருக்கிறார்.

உலகப் போர் மூளும் அபாயம்… ஐ.நா கவலை:
இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல், பல நாடுகளின் ஆதரவுக் கரங்களால் இரு அணிகளுக்கு இடையேயான போராக வெடிக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. இது இப்படியே நீடித்தால் மத்தியக் கிழக்கில் மூன்றாம் உலகப்போரே வெடிக்கும் அபாயத்துக்கு கொண்டுசெல்லும் என உலக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “இரான், இஸ்ரேல் மீது நடத்தியப் பெரிய அளவிலான தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விரோதங்களை உடனடியாக நிறுத்துமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். இதனால் மத்திய கிழக்கில் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மற்றுமொரு போரை இந்தப் பிராந்தியமோ அல்லது உலகமோ தாங்காது என்பதை நான் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

