Last Updated:
குடும்பத்தினரே சில சமயங்களில் திருநங்கை நபர்களை ஒதுக்கி வைக்கின்றனர். எனவே அவர்களின் வாழ்க்கையில் சமூகத்திற்கு ஒரு பெரிய பங்கு உள்ளது
திருநங்கை மாணவர்களுக்காக அவர்களுக்கென்று பிரத்யேக விடுதியை கேரளாவை சேர்ந்த பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் திருநங்கை மாணவர்களுக்காக ஒரு பிரத்யேக விடுதி திறக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இது போன்றதொரு முயற்சி நடப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
இந்த விடுதிக் கட்டிடத்தை கேரள சமூக நீதித்துறை அமைச்சர் டாக்டர் ஆர். பிந்து திறந்து வைத்துள்ளார். தனி விடுதி அமைக்கப்பட வேண்டும் என்பது திருநங்கை சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது.
இந்த புதிய விடுதி வசதி, திருநங்கை மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆர். பிந்து, கேரளாவில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஷிப் (JRF) தேர்வில் தேர்ச்சி பெறும் திருநங்கை மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் தொடங்கியுள்ள இந்த விடுதி திட்டத்தை அமைச்சர் ஆர். பிந்து பாராட்டினார். இது ஒரு சிறப்பான மற்றும் வரவேற்கத்தக்க முயற்சி என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் திருநங்கை சமூகம் தங்கள் வாழ்வில் பல போராட்டங்களைச் சந்திப்பதாகவும், அவர்களுக்குச் சமூகத்தின் ஆதரவு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். குடும்பத்தினரே சில சமயங்களில் திருநங்கை நபர்களை ஒதுக்கி வைப்பதாகவும், எனவே அவர்களின் வாழ்க்கையில் சமூகத்திற்கு ஒரு பெரிய பங்கு உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த தங்கும் விடுதி குறித்து திருநங்கை மாணவர்கள் கூறுகையில் பல்கலைக்கழகத்தின் இந்த விடுதி வசதி எங்கள் சமூகத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதம். திருநங்கை மாணவர்கள் வெளியூர்களில் தங்குவதற்கு இடம் கிடைப்பது கடினம். வாடகை அதிகமாக இருப்பதால் அதைச் சமாளிப்பதும் சிரமம் என்று தெரிவித்தனர். கேரள பல்கலைக் கழகத்தின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது
August 26, 2025 6:05 PM IST
திருநங்கை மாணவர்களுக்கென பிரத்யேக தங்கும் விடுதி.. கேரளாவில் முதன்முறையாக தொடங்கிய பல்கலைக் கழகம்…


