கோலாலம்பூர்:
உலகப் பூப்பந்து போட்டியில் தேசிய கலப்பு இரட்டையர் சென் தாங் ஜி – டோ ஈ வெய் தங்கப் பதக்கத்தையும், மகளிர் இரட்டையர் பெர்லி தான் – எம். தீனா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். இந்த வெற்றி, நாட்டின் “ரோட் டு கோல்ட்” திட்டம் வழங்கிய சிறந்த அடைவுநிலைக்கான உறுதியான சான்றாகக் கருதப்படுகிறது.
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ, “அரசாங்க ஒதுக்கீடுகள் வீணாகவில்லை; மாறாக, அவை தேசிய விளையாட்டு துறையின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் வலுப்படுத்தும் முக்கிய முதலீடாக விளங்குகின்றன” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இந்தத் திட்டத்தின் மூலம் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு விளையாட்டாளரும் நாட்டிற்காக தங்கள் உறுதிப்பாட்டை வழங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்கள் அந்த உறுதிப்பாட்டைப் பின்பற்றி வருகின்றனர். வெறும் நான்கு மாதங்களில் அதற்கான வெற்றியை நாம் கண்டிருக்கிறோம். இது உண்மையில் நாட்டிற்கான பெருமை.”
அதோடு, ஷகாம் (SHAKAM) திட்டத்தின் கீழ் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு 20,000 ரிங்கிட் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 10,000 ரிங்கிட் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.




