டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த நிதியமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில், 4 அடுக்குகளாக உள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்களை 5 மற்றும் 18 சதவிகிதம் என இரு அடுக்குகளாக மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இதன் மூலம்175 பொருட்கள் மீதான வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பென்சில், ஷார்ப்னர், ரப்பர், கிரையான்ஸ் உள்ளிட்ட எழுதுபொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதே போன்று, பன்னீர், ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புற்றுநோய்க்கான 30 மருந்துகள், அரிய வகைக்கான மருந்துகளுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பற்பொடி, குடை, தையல் மிஷின், மிதிவண்டி, சீப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12 விழுக்காட்டில் இருந்து 5 ஆக குறைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதே போன்று, பவுடர், ஷாம்பு, சோப், டூத் பிரெஷ் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயம் சார்ந்த பொருட்கள், ஆடைகள், காலணி, உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் வரியும் குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்திற்கு பிறகு ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Delhi,Delhi,Delhi
September 03, 2025 2:16 PM IST
GST Council Meeting | டெல்லியில் இன்று கூடியது ஜிஎஸ்டி கூட்டம்… எந்தெந்த பொருட்களின் விலை குறையப்போகுது தெரியுமா?

