இந்தியா – அமெரிக்கா இடையே வரி, வர்த்தகப் பிரச்னை பூதாகரமாகப் போய் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ராணுவக் கூட்டுப் பயிற்சிக்காக இந்திய ராணுவம் அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு சென்றுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்திய ராணுவப் பிரிவு ஒன்று, அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஃபோர்ட் வெயின்ரைட் முகாமிற்கு “யுத் அப்யாஸ் 2025′ என்ற ராணுவக் கூட்டுப் பயிற்சிக்காக சென்றுள்ளது. இது செப்டம்பர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அமெரிக்காவின் 11-வது ஏர்போர்ன் பிரிவின் வீரர்களுடன் இணைந்து, இந்திய ராணுவ வீரர்கள் ஹெலிபோர்ன் நடவடிக்கைகள், மலைப்போர் முறை, ஆளில்லா வான்வழி அமைப்பு (UAS) / கவுண்டர்-UAS மற்றும் கூட்டுத் தந்திரப் பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர். இது இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உலக நாடுகளுக்கிடையே இத்தகைய கூட்டுப் பயிற்சிகள் நடைபெறுவது இயல்பு தான். ஆனால், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு சரியில்லாத இந்த நேரத்தில், இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் கூட்டு ராணுவப் பயிற்சி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

