பெட்டாலிங் ஜெயா:
கொடுமைப்படுத்தலை (Bullying) எதிர்க்கும் முயற்சிகளை அரசு மேலும் வலுப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போதுள்ள சட்டங்களை பலப்படுத்துதல், கொடுமைப்படுத்தல் எதிர்ப்பு தீர்ப்பாயம் (Anti-Bullying Tribunal) உருவாக்குதல் மற்றும் தண்டனைக்கு அப்பாற்பட்டு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வை முன்னிறுத்தும் முழுமையான அரசாங்க அணுகுமுறையை வலியுறுத்துகிறது.
பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு (BHEUU) ஏற்பாடு செய்த கொடுமைப்படுத்தல் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் உயர்மட்டக் கூட்டம் இன்று கோலாலம்பூரில் உள்ள ஆசிய சர்வதேச நடுவர் மையத்தில் (AIAC) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவல் சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஓத்மான் சையத் தலைமையேற்றார்.
இந்த அமர்வில், கல்வி, சுகாதாரம், உள்துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள் மற்றும் மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (Suhakam) போன்ற நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆகஸ்ட் 29 அன்று அமைச்சரவை எடுத்த முடிவின் அடிப்படையில், நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான அணுகுமுறையை ஏற்க அரசு ஒப்புக்கொண்டது. அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை முன்னெடுக்கும் மைய தளமாக செயல்படும் கொடுமைப்படுத்தல் குறித்த சிறப்பு குழுவை வழிநடத்தும் பொறுப்பு அசலினாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள்:
- குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்லாமல், குழந்தைகளைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும் சட்டங்களை வலுப்படுத்துதல்.
- மாணவர்கள் மற்றும் சிறார்களை உள்ளடக்கிய வழக்குகளை விசாரிக்க அரை நீதித்துறை அமைப்பாக செயல்படும் கொடுமைப்படுத்தல் எதிர்ப்பு தீர்ப்பாயம் குறித்த மசோதாவை தயாரித்தல்.
- குழந்தைகள் சட்டம் 2001 படி, சிறுவர்கள் அல்லது டீனேஜர்களாக இருக்கும் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு மையப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் அறிமுகப்படுத்துதல்.
- பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பணியிடங்கள், சமூகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் ஆகியவற்றில் நாடு தழுவிய தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
“கொடுமைப்படுத்தல் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூகத்திற்கும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் முக்கிய தேசிய சவாலாக மாறியுள்ளது. மலேசியாவில் வலுவான, நியாயமான மற்றும் பயனுள்ள கொடுமைப்படுத்தல் தடுப்பு அமைப்பை உருவாக்குவதற்கான முதல் மற்றும் முக்கியமான படியாக இன்றைய அமர்வு விளங்குகிறது,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
BHEUU மேலும், ஒவ்வொரு திட்டமும் யதார்த்தமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் செயல்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் என தெரிவித்துள்ளது. அமைச்சகங்கள், நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் இணைந்து பணிபுரிவதன் மூலம், மலேசிய மதானி நோக்கங்களுக்கேற்ப, மலேசியாவை பாதுகாப்பான, இணக்கமான மற்றும் கொடுமைப்படுத்தலற்ற சூழலாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.




