இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்திருப்பது, உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பை நீக்குமாறு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இதைப் பயன்படுத்தி, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யத் தயாரிக்கப்பட்ட முன்னணி பிராண்டுகளின் பொருள்களைச் சலுகை விலையில் விற்பதாகக் கூறி தரமற்ற பொருள்களை விற்பனை செய்த சம்பவமும் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது.
ஈரோடு மாவட்டம், திண்டலில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில், வடமாநில ஜவுளி நிறுவனம் ஒன்று, அமெரிக்காவின் வரி விதிப்பால் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காகக் கோடிக்கணக்கான அளவில் தயாரிக்கப்பட்ட முன்னணி பிராண்டுகளின் ஆடைகள், காலணிகள் தேக்கம் அடைந்துள்ளன என்று சொல்லி, அதைச் சலுகை விலையில் விற்பனை செய்வதாக உள்ளூர் நாளிதழ்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் கொடுத்திருந்தது.
அதிலும், குறிப்பாக ரூ.3,000 மதிப்பிலான ஏற்றுமதி செய்யக்கூடிய ஆயத்த ஆடைகள், காலணிகள் ரூ. 200, ரூ.300 ரூபாய்க்கும், முன்னணி நிறுவனங்களின் ரூ.8000 மதிப்புள்ள பொருள்கள் ரூ. 500 ரூபாய் முதல் ரூ.1490 வரை விற்பனை செய்வதாகவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், சிறப்புச் சலுகையாக லேடிஸ் பர்ஸ், லெதர் பெல்ட், இன்சுலேட் வாட்டர் பாட்டில், நறுமணப் பொருட்கள் ரூ.100-க்கும், ரூ.1500 மதிப்புள்ள குழந்தைகளின் ஆடைகள் ரூ.100க்கும், ரூ. 3000 மதிப்புள்ள பெண்களுக்கான பிரீமியம் ஆடைகள் ரூ. 200 க்கும் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

