செர்டாங்,
அதிவேக ஆற்றலைக் கொண்ட கிட்டத்தட்ட 6 ஆயிரம் மோட்டார் சைக்கிளோட்டிகள் நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேப்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்றுதிரண்டனர். யுனைட் 4 கெம்பாபூமி என்ற சுலோகத்துடன் அவர்கள் கலந்து கொண்டது மலேசியர்களை வெகுவாகக் கவர்ந்தது.
வயலன்ட் ஸ்டோர்ம் எம்ஜி என்ற அமைப்பு 32 மோட்டார் சைக்கிள் கிளப்புகளுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. நாடு முழுவதிலும் இருந்து அதிவேக ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் ஒன்று திரண்டதைக் காண 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆர்வலர்களும் ரசிகர்களும் பொதுமக்களும் அங்கு திரண்டனர்.
இனம், சமய வேறுபாடு இன்றி அதிவேக மோட்டார் சைக்கிள்கள் மீது கொண்டிருந்த ஆர்வ மிகுதியால் அவர்கள் அங்கு திரண்டனர். பல்வேறு வடிவமைப்பில், அளவுகளில் அந்த மோட்டார் சைக்கிள்கள் பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்தன.

மோட்டார் சைக்கிள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதோடு மோட்டார் சைக்கிள் தொடர்பான பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன. அதிர்ஷ்டக் குலுக்கும் நடத்தப்பட்டது. கலாச்சாரப் படைப்புகள் கண்கவரும் வகையில் அமைந்திருந்தன. காலை 11.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அதிர்ஷ்டக் குலுக்கு வழி 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் தேசப் பற்றை ஆழமாக விதைப்பதோடு மட்டுமன்றி மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது கொண்டிருக்கும் ஒரு தவறான சமூகப் பார்வையைப் போக்குவதற்கும் நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளோட்டிகள் ஒழுக்கம் இல்லாதவர்கள், பண்பில்லாதவர்கள் என்பது பலரின் பார்வையாக இருக்கிறது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டு நிர்வாகி நஸாத்துல் அமின் ஜபார் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள உயர் அதிவேக மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களை ஒன்றிணைப்பதும் அவர்களுக்கும் தேவையான ஊக்கமளிப்பைத் தருவதும் தங்களுடைய இலக்குகளுள் ஒன்று. அதேசமயம் நம்முடைய இனம், கலாச்சாரம் ஆகியவற்றின் மீது ஓர் உயர்ந்த மதிப்பை ஏற்படுத்துவதோடு தேசப்பற்றோடு நாட்டை நேசிக்கும் உணர்வையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை உள்ளூர் மோட்டார் சைக்கிள் கிளப் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கும் ஒரு நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது.

இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் அதிவேக மோட்டார் சைக்கிளோட்டிகள் கலந்துகொண்டது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் தந்த ஆதரவு தங்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 6 ஆயிரம் மோட்டார் சைக்கிளோட்டிகளை ஒன்று திரட்டி இருப்பது மிகப்பெரிய சாதனையாகப் பதிவாகி இருக்கிறது என்று நஸாத்துல் அமின் கூறினார்.
உண்மையிலேயே இது ஒரு சிறந்த நிகழ்ச்சி. அதிவேக மோட்டார் சைக்கிள்கள் மீது ஆர்வம் கொண்டுள்ளோரை ஒரே இடத்தில் கொண்டு வந்து சேர்த்திருப்பது அளவு கடந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அடுத்தாண்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஸ்கை ஹாக் மலேசியா மோட்டார் சைக்கிள் கிளப்பின் தலைவர் முகமட் இர்வான் முகமட் முஸ்தாபா கூறினார்.




