Last Updated:
ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சமீபத்தில் எச்சரித்திருந்தனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நீடித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொள்ளும் அமைதி முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகள் தடையாக உள்ளன என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் “ஐரோப்பாவில் உள்ள போரை ஆதரிக்கும் நாடுகள்” அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அமைதி முயற்சிகளைத் தொடர்ந்து தடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
ரஷ்யா அமைதி மற்றும் ராஜதந்திர வழிகளில் இந்தச் சிக்கலைத் தீர்க்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் உக்ரைனிடம் இருந்து அதற்குரிய ஒத்துழைப்பு இல்லாததால் தங்களது “சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை” தொடர்வோம் என்றும் அவர் கூறினார்.
உக்ரைனில் அமைதி ஏற்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதற்கான அவரது பேச்சுவார்த்தை முயற்சிகளை ரஷ்யா “மிக முக்கியமானது” என்று பாராட்டியுள்ளது.
இந்த சூழலில் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளன. அமைதிப் பேச்சுவார்த்தைகள் உக்ரைனின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறக்கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உறுதியாகக் கூறி வருகின்றனர்.
ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்வதால், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கை குறைந்துவிட்டதாகவும், இதனால் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைத் தொடர்வது அவசியம் என்றும் ஐரோப்பிய நாடுகள் கூறி வருகின்றன.
சமீபத்தில் உக்ரைனின் கீவ் நகரில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, ஐரோப்பிய தலைவர்கள் ரஷ்யாவைக் கடுமையாகக் கண்டித்து, அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும் ரஷ்யா தனது தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்தினால் மட்டுமே அமைதி ஏற்படும் என்பது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் கருத்தாக உள்ளது.
August 31, 2025 5:23 PM IST


