Last Updated:
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு அதிகரிக்கிறது, ஆனால் மா.சுப்பிரமணியன் பதற்றம் தேவையில்லை என கூறி, அசுத்தமான நீரில் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
கேரளாவில் கோழிக்கோடு, மூணாறு ஆகிய பகுதிகளில் தூய்மையற்ற நீர்நிலைகளில் குளித்தவர்களுக்கே இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அசுத்தமான ஏரி, குளங்களில் குளிக்கும் போது, மூக்கின் வழியே மூளைக்குள் நுழையும் அமீபா, திசுக்களை அழித்தொழிக்கும். தலைவலி, காய்ச்சல், வாந்தியில் தொடங்கும் அறிகுறிகள் மயக்கம், கோமா நிலைக்கு அழைத்து செல்லும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடலில் இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, சுற்றுப்புறங்களின் கவனத்தை இழப்பது ஆகியவை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த அமீபா உடலுக்குள் நுழைந்த 18 நாட்களில் உயிர் இழப்பு ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு மிகவும் அரிதானது என்பதால், சோதனை மூலம் கண்டறிவதும், உரிய சிகிச்சை அளிப்பதும் கடினமானது எனக் கூறப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் அசுத்தமான நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பதற்றம் அடையாமல், விழிப்புணர்வுடன் இருந்தால், மூளையை தின்னும் அமீபாவை கண்டு அச்சப்படத் தேவையில்லை என்பதே பெரும்பாலான மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
இதனிடையே கேரளாவில் கண்டறியப்பட்ட மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பால் பதற்றம் அடையத் தேவையில்லை என கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அசுத்தமான நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செப்ஹாலிடிஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. உயிரிழப்புகளும் ஏற்படுவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மூளையை தின்னும் அமீபா பாதிப்பு, ஒரு தொற்று நோய் அல்ல என்றார். எனவே, பொதுமக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் விளக்கமளித்தார். மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தமிழ்நாட்டில் பதிவாகவில்லை என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
August 29, 2025 6:49 AM IST


