Last Updated:
பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி சாப்ட்வேர் இன்ஜினியர் ஷில்பா தற்கொலை செய்தார்.
பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுட்டகுண்டேபல்யா பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், ஆரக்கிள் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஷில்பா என்பவருடன் பிரவீனுக்கு திருமணம் நடைபெற்றது. இன்ஜினியரிங் பட்டதாரியான ஷில்பாவும் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர்களின் திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 15 லட்சம் ரூபாய் ரொக்கம், 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை தொடங்கிய தம்பதிக்கு, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு ஐடி ஊழியரான பிரவீன் வேலை பறிபோயுள்ளது.
முன்னதாக குடும்பத்தை கவனிப்பதற்காக ஷில்பாவும், தனது வேலையை விட்டுள்ளார். இருவருக்கும் வேலை இல்லாத நிலையில் பானி பூரி கடையை பிரவீன் நடத்தியுள்ளார். தொழிலை மேம்படுத்துவதற்காக மனைவியிடம் மேலும் 5 லட்சம் ரூபாய் உங்களது வீட்டில் வாங்கி வா என்று கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்ப்பிணியாக இருந்த ஷில்பா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஷில்பாவின் தாயார் சாரதா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், திருமணத்திற்கு பிறகு வரதட்சணையாக கூடுதல் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி வாங்கி வா என ஷில்பாவின் மாமியார் சந்தாவா குடைச்சல் கொடுத்ததாக கூறியுள்ளார். 6 மாதத்துக்கு முன்பு கேட்ட 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த பிறகும், தொடர்ந்து தனது மகளை அவமானப்படுத்தியதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக, தனது மகளின் நிறம் குறித்து கேலி பேசிய மாமியார், நீ தனது மகனுக்கு சரியான ஜோடி இல்லை என்று குத்திக் காட்டியதாக கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் எல்லை மீறிய மாமியார், உன் வீட்டில் கூடுதலாக வரதட்சணை வாங்கி வா அல்லது, வேறொரு பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவேன் என்று மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலால் ஷில்பா தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகாரின் பேரில் வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன், கர்ப்பிணியின் கணவன் பிரவீன் மற்றும் மாமியார் சந்தாவா ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணியாக இருந்த சாப்ட்வேர் இன்ஜினியர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
August 29, 2025 7:26 PM IST
“நீ அழகாக இல்லை..” கேலி பேசிய மாமியார்.. டார்ச்சர் கொடுத்த கணவன்.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு!


