புதுடெல்லி,ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.
இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.
லஷ்கர்-இ-தைபா பயங்கரவாத இயக்கத்தின் 3 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருந்தவர்கள் என என்.ஐ.ஏ. இன்று உறுதிப்படுத்தி உள்ளது.அவர்கள் 3 பேரும் பஹல்காமின் பேசரண் பகுதியை இலக்காக கொண்டனர். ஏனெனில், அது தனிமையான இடம். போலீஸ் பாதுகாப்பும் குறைவு மற்றும் சுற்றுலாவாசிகள் அதிகம் கூட கூடிய இடம் என பயங்கரவாதிகளுக்கு சாதகம் வாய்ந்த நிறைய விசயங்கள் இருந்துள்ளன.
உணவு, தங்குமிடம் ஆகியவற்றுக்காக தொழிலாளர்கள் 2 பேருக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்துள்ளனர். அந்த 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது.




