Last Updated:
திருப்பதி சீனிவாச மங்காபுரத்தில் சுபாஷ் மற்றும் கூட்டாளி மோட்டார் சைக்கிளில் நாடகமாடி செல்போன் திருட்டு செய்து எஸ்கேப் ஆன சம்பவம் சிசிடிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நடைபெற்ற செல்போன் திருட்டு சம்பவம், இப்படியும் கூட நடக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
திருப்பதி அருகே உள்ள சீனிவாச மங்காபுரத்தில் தன்னுடைய சட்டை பையில் செல்போனுடன் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இதைக் கவனிக்க இன்று எப்படியாவது அந்த செல்போனை ஆட்டைய போட்டு விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
அதன்படி தன்னுடைய மோட்டார் சைக்கிளை திருப்பிச் செல்ல முயல்வது போல் நடித்தார். அப்போது, வாகனம் வழுக்கிக் கொண்டு கீழே விழப் போவது போல் நாடகமாடிய அவர், ஐயா யாராவது வந்து உதவி செய்யுங்க எனக் கூறியிருக்கிறார். செல்போனுடன் சென்ற நபர் உடனடியாக ஓடோடிச் சென்று அந்த இளைஞருக்கு உதவ முயன்றார்.
அப்போது அந்த பைக் ஆசாமியின் கூட்டாளியும் அதே பகுதியில் எதார்த்தமாக நடந்து செல்வது போல் அங்கு ஓடி வந்துள்ளார். கூட்டாளியும் உதவுவது போல் நடிக்க அந்த கேப்பில் செல்போனை உருவி விட்டனர். அதன்பிறகு பைக் இளைஞரும் கூட்டாளியும் ஒரே பைக்கில் ஏறி எஸ்கேப் ஆகி விட்டனர். உதவி செய்தவர் 5 அடி நடந்து சென்ற பின் சட்டைப் பையில் ஏதோ வெயிட் குறைகிறதே என குனிந்து பாக்கெட்டைப் பார்க்க செல்போன் மாயமானது கண்டு அதிர்ந்து போனார்.
பின்னால் திரும்பிப் பார்த்தால் திருடர்கள் இருவரும் பைக்கில் சிட்டாக பறந்து கொண்டிருந்தனர். சில நொடிகளில் அரங்கேறிய இந்த நூதன திருட்டு சம்பவத்தின் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து செல்போனை இழந்தவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், செல்போன் திருட்டு நாடகத்தை அரங்கேற்றி தப்பி சென்ற நபரின் பெயர் சுபாஷ் என்று தெரியவந்துள்ளது. அந்த சுபாஷை போலீசார் தற்போது தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர். உதவி கோரி செல்போனை உருவிச் சென்ற இந்த நூதன திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tirupati,Chittoor,Andhra Pradesh
August 28, 2025 7:40 PM IST


