Last Updated:
38 வயதாகும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் 187 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவிப்பை வெளியிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவர் ஓய்வை அறிவித்திருப்பது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த டிசம்பர் மாதம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்திருந்தார்.
38 வயதாகும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் 187 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார் அஸ்வின். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்ற போது அஸ்வின் அணியில் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அஸ்வின் ஒவ்வொரு முடிவுக்கும் புதிய தொடக்கம் இருக்கும் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார். சுவாரஸ்யம் அளிக்கும் தகவலாக சென்னை அணியில் அஸ்வின் இடம் பெற்றிருந்தபோது அதன் தற்போதைய கேப்டன் தோனியை விடவும் 2 மடங்கு அதிகம் அஸ்வின் ஊதியம் பெற்றிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
எம்.எஸ். தோனி அண்கேப்டு ஆட்டக்காரராக அணியில் தக்க வைத்துக் கொள்ளப்பட்டார். அவருக்கு 2025 ஆம் ஆண்டு ஏலத்தின் போது 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஏலத்தின்போது 9 கோடியே 75 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாடினார். அதன் பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலும், ராஜஸ்தான் அணிக்காகவும் விளையாடினார். கடந்த சீசனில் அவரது பழைய அணியான சென்னை சூப்பர் கிங்சுக்கு அவர் திரும்பினார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
August 28, 2025 3:53 PM IST


