Last Updated:
ப்ரோமோவில் சூர்யா குமார் யாதவ், பாகிஸ்தான் வீரர் ஷாகீன் அப்ரிதி ஆகியோர் விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரையொட்டி வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக சேவாக் மற்றும் பிசிசிஐக்கு கண்டனம் தெரிவித்து ரசிகர்கள் பதிவேற்றியுள்ளார்கள். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பகல் காமில் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 28 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளது.
இத்தகைய சூழலில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்தத் தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளது. இது தொடர்பாக ஒளிபரப்பு உரிமையைப் பெற்றிருக்கும் சோனி லைவ் நிறுவனம் தற்போது ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ப்ரோமோவில் சூர்யா குமார் யாதவ், பாகிஸ்தான் வீரர் ஷாகீன் அப்ரிதி ஆகியோர் விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த விளம்பரத்தில் வீரேந்தர் சேவாக் நடித்துள்ளார்.
சோனி லைவ் வெளியிட்டுள்ள விளம்பரப் பகுதியில் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் ஆசிய கோப்பை தொடர்பாக சோனி லைவ் வெளியிட்டுள்ள ப்ரோமோ சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
August 28, 2025 1:17 PM IST


