கோலாலம்பூர்:
2040 ஆம் ஆண்டுக்குள் தேசிய எரிசக்தியில் குறைந்தது 40 விழுக்காட்டை இயற்கை எரிசக்தியாக மாற்றும் இலக்கை நோக்கி, மலேசிய அரசு சூரியசக்தித் திட்டங்களை விரிவுபடுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என எரிசக்தி மற்றும் நீர் உருமாற்ற துணை அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசிர் தெரிவித்தார்.
“இலக்கை அடைய, தேவையான அனுமதிகளுடன் தற்போதைய கட்டமைப்பால் சமாளிக்கக்கூடிய பெரிய அளவிலான சூரியசக்தித் திட்டங்களை அமைத்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
அத்துடன், பகலிலேயே உற்பத்தி செய்யப்படும் சூரியசக்தியை சேமித்து பயன்படுத்தும் வகையில் பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems – BESS) நிறுவும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தேசிய எரிசக்தி உருமாற்றத் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட புதிய எரிசக்தி வளங்களை அரசு ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
உள்நாட்டு உற்பத்தியைத் தவிர, ஆசியான் மின்சாரக் கட்டமைப்புத் திட்டம் (ASEAN Power Grid) மூலமாக வட்டார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் மலேசியா தீவிரமாக செயல்பட்டு வருவதாக துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.




