Last Updated:
இஸ்ரோ 2035-இல் BAS – 01 பாகத்துடன் இந்திய விண்வெளி நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் ஆதிக்கம் செலுத்த உலக நாடுகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. இதன்படி, இந்தியா சார்பில் 2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் தனி விண்வெளி நிலையத்தை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கான முதல் படியாக விண்வெளியில் அமைய இருக்கும் பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன் எனப்படும் இந்திய விண்வெளி நிலையத்தின் மாதிரி, தேசிய விண்வெளி தின விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2028ஆம் ஆண்டு இந்திய விண்வெளி நிலையத்தின் முதல் பாகம் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 டன் எடை கொண்ட இந்த முதல் பாகத்தை விண்ணில் ஏவுவதற்கு சக்தி வாய்ந்த ராக்கெட்டுகள் தேவை என்பதால் அதனை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. BAS – 01 என பெயரிடப்பட்ட இந்த விண்வெளி மையத்தின் முதலாவது பாகம்தான் 2035-இல் அமைய இருக்கும் இந்திய விண்வெளி நிலையத்தின் முக்கிய அங்கமாக செயல்பட உள்ளது.
மொத்தம் 3 புள்ளி 8 மீட்டர் விட்டமும், 8 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பாகத்தில் விண்வெளிக்கு வரும் பிற விண்கலன்களை இணைக்கும் பாரத் டாக்கிங் பாண்ட் மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கான பகுதி மற்றும் மிகக் குறைந்த புவி ஈர்ப்பு விசையில் மனிதர்கள் மற்றும் தாவரங்களுக்கு ஏற்படும் மாற்றம் குறித்து பரிசோதிப்பதற்கான ஆய்வகம் ஆகியவை இடம்பெற உள்ளன.
எளிமையாக சொல்லப்போனால் இந்திய விண்வெளி நிலையத்தின் அடித்தளமாக அமையப்போவது இந்த BAS – 01 பாகம்தான். இந்த பாகத்தை மையமாக வைத்துதான் மொத்தம் 5 பாகங்களாக இந்திய விண்வெளி நிலையம் கட்டமைக்கப்பட உள்ளது.
தற்போது ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் இணைந்து நடத்தும் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் சீனாவின் டியான்காங்க் விண்வெளி நிலையம் ஆகியவை செயல்பாட்டில் உள்ள நிலையில், இந்தியாவின் தனி விண்வெளி நிலையம் மூன்றாவதாக அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையம், விண்வெளியில் ஒரு ஆய்வுக் கூடமாக மட்டும் செயல்படாமல் எதிர்காலத்தில் விண்வெளி சுற்றுலா செல்வதற்கான மையமாகவும், 2040 ஆம் ஆண்டு இந்தியர்கள் நிலவுக்கு சென்றுவரும் திட்டத்திற்கான முக்கிய பணியை செய்யும் கட்டுப்பாட்டு மையமாகவும் செயல்பட உள்ளது. பிற கிரகங்களுக்கு இந்தியர்கள் பயணிக்கும் போதும் கட்டுப்பாட்டு மையமாக பயன்படுத்தப்பட உள்ளது.
ஆகவே, அடுத்த 50 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் செயல்பாட்டிற்கான அடித்தளமாக இந்திய விண்வெளி நிலையம் அமையும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
August 25, 2025 4:44 PM IST


