இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வேளாண் மற்றும் பால் பொருள்கள் மீது வரிச் சலுகையை அமெரிக்கா தொடா்ந்து கோரி வந்தது. ஆனால், அதை அளிக்க முடியாத கடினமான சூழலையும், எந்த நாட்டுக்கும் இதில் வரிச் சலுகை அளிக்கப்படாததையும் இந்தியா எடுத்துரைத்தது. இதனால், இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடுவையும் கடந்து இழுபறி நீடித்தது. அதன் காரணமாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தாா். அது கடந்த 7-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தது. அதைத் தொடா்ந்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்து, மொத்த வரி விதிப்பை 50 சதவீதமாக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். பின்னா், இந்த கூடுதல் வரி விதிப்பை 3 வாரங்களுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் ஒத்திவைத்தாா். அதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே தொடா்ந்து வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

