Last Updated:
Ravichandran Ashwin, Border-Gavaskar Trophy போட்டியில் ஓய்வு எடுத்தது வெளிநாட்டு தொடரில் வாய்ப்பு இல்லாமை காரணம் என கூறினார்; குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புகிறார்.
வெளிநாட்டு தொடர்களில் தனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உட்கார வைக்கப்பட்டது தான், ஓய்வு முடிவுக்கு காரணம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த ஆண்டு டிசம்பரில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போட்டியின் போது திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், குட்டி ஸ்டோரீஸ் என்ற பெயரில் அஸ்வின் வெளியிட்டுவரும் யூடியூப் நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விருந்தினராக பங்கேற்றார். அப்போது, ஓய்வுமுடிவு குறித்த ராகுல் டிராவிட்டின் கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களுக்குச் சென்று, பெரும்பாலான போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அது தனக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அஸ்வின் பகிர்ந்துள்ளார். சும்மா உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கலாமே என்ற எண்ணத்தில் எடுத்த முடிவு என்றும் விவரித்திருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையுடன் ஓய்வு பெற்ற அஸ்வின், தனது 34 அல்லது 35 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று முன்பே திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும், அது தனது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற நேரத்தை கொடுக்கும் என்றும் அஸ்வின் கூறினார்.
Chennai,Tamil Nadu
August 22, 2025 6:36 PM IST


