சென்னை: இதுவரை திமுக – அதிமுக என்று இருந்த தேர்தல் களம் பாஜக தலைமையை எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாகவும் மிகக் கடுமையாகவும் விமர்சித்து இருப்பதன் மூலம் அதிமுக பாஜக இடையேயான போட்டியாக மாறி இருப்பதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். கவுன்சிலர் கூட ஆக முடியாது தம்பி அண்ணாமலை.. பார்த்து நடந்துக்க.. என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்ததின் மூலம் உற்சாகமடைந்திருக்கும் அதிமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் எடப்பாடிக்கு மாஸ் பிஜிஎம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் களம் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டியால் தினமும் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த காலமாக மாறி வருகிறது. தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரத்தால் தொண்டர்கள் உற்சாகமாகி வருகின்றனர். திமுக-அதிமுக: கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது தேசிய தலைவர்கள் தொடங்கி மாநிலத் தலைவர்கள் வரை ஊர் ஊராகச் சென்று தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். இன்னும் ஒரு வாரம் தேர்தல் திருவிழாவிற்கான கால அவகாசம் இருக்கும் நிலையில் இறுதி கட்டப் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. தற்போதைய சூழலைப் பொறுத்தவரை திமுகவும் சரி அதிமுகவும் சரி பாஜகவை நோக்கிய விமர்சனக்கணைகளை தொடுத்து வருகின்றன.
அதிமுக-பாஜக மோதல்: பிரச்சாரத்தின் ஆரம்பத்தில் அதிமுக திமுகவை விமர்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டு இருந்தது. அதே நேரத்தில் திமுக அதிமுகவையும் பாஜகவையும் விமர்சித்து வந்த நிலையில், பாஜகவினர் திமுகவை மட்டும் நோக்கிய கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சமீபத்திய செய்தியாளர் சந்திப்புகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுகள் அதிமுகவினரை கொதிப்படைய வைத்தது. அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுகவில் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் போன்ற முன்னாள் அமைச்சர்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தாலும் அதிமுக தலைமையான எடப்பாடி பழனிச்சாமியோ எந்த விதமான ரியாக்சனும் காட்டவில்லை.
அண்ணாமலை பேச்சு: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஒழிப்போம் என அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கொதிப்படைய செய்திருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதிமுக பாஜக இடையேயான வார்த்தை போர் இன்று நேற்றல்ல கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்பிய பாஜகவை கண்டுகொள்ளாததால் மாநில தலைவர்கள் அக்கட்சியை விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் தேசிய தலைவர்கள் தமிழகம் வரும்போதெல்லாம் அதிமுகவை பற்றியும் அதன் தலைவர்களை பற்றியும் பெருமையாகவே பேசி வந்திருக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி: ஆனால் அண்ணாமலையின் பேச்சுகளால் அதிமுக பாஜக இடையே சுமூகமான போக்கு மோதல் போக்காக மாறியது. இதனால் இது தரப்பினரும் மாறி மாறி தாக்குதல் தொடுத்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி நரி என அண்ணாமலை விமர்சிக்க அண்ணாமலையே ஒரு வால் அறுந்த நரி தான் என அதிமுக பதிலடி கொடுத்தது. மேலும் நாவை அடக்கிப் பேச வேண்டும் அண்ணாமலை .. இல்லை என்றால் நாக்கு வெட்டப்படும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்தார் மதுரையை சேர்ந்த முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜு. இந்த நிலையில் தான் அதிமுகவை ஒழிப்போம் என பேசிய அண்ணாமலையின் பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்திருக்கிறார்.
அண்ணாமலைக்கு பதிலடி: சேலத்தில் அதிமுக சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கொஞ்சம் ஆக்சன் மோடிலேயே இருந்த எடப்பாடி பழனிச்சாமி, தம்பி அண்ணாமலை அதிமுக உங்கள் பாட்டனையே பார்த்த கட்சி.. எத்தனையோ பேர் ஆணவத்தில் பேசி இருக்கிறார்கள்.. அதிமுகவை அசைக்க முடியாது.. ஆணவத் திமிரில் பேசாதப்பா என வெளுத்து வாங்கினார். மேலும் உன்னால் ஒரு கவுன்சிலர் ஆக முடியவில்லை எம்எல்ஏ ஆக முடியவில்லை எம்பியாக முடியவில்லை.. நீ எப்படி அதிமுகவை ஒழிப்பேன் என பேசலாம் பதவி வரும்போது பணிவு வரவேண்டும்.. தலைக்கனத்தில் ஆடுகிறாய் இது நிலைக்காது என பஞ்ச் டயலாக் பேசி அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.. இதனால் சமூக வலைதளங்களில் உற்சாகமான அதிமுக தொண்டர்கள் பாஜக ஐடிவிங்கை பொளந்து கட்டி வருகின்றனர்.
அதிமுகவினர் உற்சாகம்: அது மட்டும் இல்லாமல் கடந்த காலங்களில் பாஜகவின் தலைவர்கள் பேசிய பேச்சுகளையும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பேசிய பேச்சுகளையும் வெட்டி ஒட்டி மாஸாக ட்ரெய்லர் போல பரப்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் வருகின்ற காலங்களில் திமுக இரண்டாம் கட்ட தலைவர்களும் பாஜக தலைமைக்கு கடுமையான பதிலடி கொடுப்பார்கள் எனவும் நட்சத்திர பேச்சாளர்கள் திமுகவை விமர்சித்தது போல பாஜகவையும் தங்கள் பிரச்சாரத்தின் போது விமர்சிக்க வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.




