நிலம் என்பது ஒரு திரவ சொத்தாக கருதப்படுகிறது. இதனை நீங்கள் நேரடியாக ஒரு முதலீடாக வைத்துக் கொள்ளலாம். வாடகைக்கு விடலாம் அல்லது பின்னர் அந்த நிலத்தை நீங்களே கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் காரணமாக பல முதலீட்டாளர்கள் பண வீக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நிலங்களை ஒரு முதலீடாக பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், அவ்வாறு செய்யும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு நிலத்தை வாங்குவதற்கு நீங்கள் முடிவு செய்துவிட்டால் நீங்கள் செய்யக்கூடிய முதல் மற்றும் மிக முக்கியமான படி இது. நீங்கள் வாங்கும் நிலமானது சந்தையில் விற்க தகுந்ததாகவும், எந்த ஒரு தகராறு, பிணைகள் அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் இல்லாததுமாகவும் இருப்பதை இது உறுதி செய்கிறது. நில பதிவுகள், முந்தைய உரிமையாளர்களின் வரலாறு, பிணை சான்றிதழ்கள் ஆகியவற்றையும் நன்றாக சரிபார்க்கவும். ஒருவேளை நீங்கள் வாங்கும் நிலமானது கிராமப்புறங்களில் அமைந்திருந்தால் அந்த நிலம் வேளாண்மை நிலமாக இருக்கிறதா, உங்கள் தேவைக்காக அதை வேளாண்மை அல்லாத பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுமா என்பதை கவனித்துக் கொள்ளவும். அனைத்து ஆவணங்களையும் ஒரு வழக்கறிஞர் மூலமாக சோதனை செய்து பார்ப்பது எதிர்காலத்தில் சட்ட சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்க உதவும்.
ஒரு நிலத்தை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதை பெரும்பாலான நேரங்களில் அரசு விதிமுறைகளே நிர்ணயம் செய்கிறது. உதாரணமாக, அது குடியிருப்பு, வணிகம், தொழில் அல்லது வேளாண்மை காரணங்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கலாம். மேலும், நகராட்சிகள் தயாரிக்கும் மாஸ்டர் பிளான்களில் ஒரு சில நிலங்கள் பொது பயன்பாடு, பசுமை வளாகம், சாலை அல்லது பிற திட்டங்களுக்காக கூட ஒதுக்கப்பட்டிருக்கலாம். இது அந்த நிலத்தின் மதிப்பையும் அதில் எவ்வளவு பெரிய கட்டடங்களை எழுப்பலாம் என்பதையும் நேரடியாக பாதிக்க கூடியது. அதனால் எந்த ஒரு நிலத்தை வாங்குவதற்கு முன்பும் அந்த பகுதியில் உள்ள உள்ளூர் மேம்பாடு ஆணையத்திடம் இது குறித்த தகவல்களை தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.
நீங்கள் வாங்கும் நிலத்தின் மதிப்பு எதிர்காலத்தில் அதிகரிக்குமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு அது போக்குவரத்து வசதிகள், சாலை, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக மையங்கள் போன்றவற்றிற்கு எவ்வளவு தூரத்தில் இருந்து அமைந்திருக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். அப்பகுதியில் புதிதாக நெடுஞ்சாலைகள், மெட்ரோ, தொழிற்சாலை மாதிரி திட்டங்கள் வர இருக்கிறதா என்பதை விசாரித்து பாருங்கள். ஒரு வேலை அப்படி வந்தால் அந்த இடத்திற்கான மதிப்பு என்பது தானாகவே உயர ஆரம்பித்து விடும். அதே சமயத்தில் நீங்கள் வாங்கும் நிலத்தின் அருகில் வெள்ளப்பாதை, குப்பைமேடு அல்லது சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பகுதிகள் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் உங்களுடைய நிலத்தின் மதிப்பு குறைவதோடு மட்டுமல்லாமல், அதன் வளர்ச்சிக்கும் பிரச்சனைகள் ஏற்படலாம்.
நீங்கள் ஒரு நிலத்தை வாங்கும்போது அதனை உங்களிடம் விற்பனை செய்தவருக்கு பணம் கொடுப்பதோடு முடிந்துவிடப் போவது கிடையாது. ஸ்டாம்ப் டியூட்டி, பதிவு செய்வதற்கான கட்டணங்கள், சொத்து வரி மற்றும் சில நேரங்களில் நில மாற்ற கட்டணங்கள் கூட செலவாகும். ஒருவேளை நீங்கள் இந்த நிலத்தை கடன் மூலமாக வாங்குகிறீர்கள் என்றால் வீட்டு கடன்களை விட நிலங்களுக்கு வழங்கும் கடன்கள் அதிக வட்டி விகிதம் கொண்டதாகவும், அதே நேரத்தில் கடனை திருப்பி செலுத்துவதற்கு குறைந்த கால அவகாசம் கொண்டதாகவும் இருக்கும். மேலும் உங்களுடைய நிலத்தை பாதுகாப்பதற்கு வேலை அமைத்தல், பராமரிப்பு, வேறு சில பாதுகாப்பு செலவுகள் போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நிலம் வாங்குவது என்பது உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடியது தான். ஆனால் அதனை உடனடியாக உங்களால் பணமாக்க முடியாத ஒரு சொத்து. நீங்கள் வாங்கிய விலையை குறைக்காமல் உடனடியாக அதனை விற்க நினைத்தால் அது சிரமமாக மாறும். அதுமட்டுமல்லாமல், அரசின் பாலிசிகள், வட்டி விகிதங்கள் அல்லது புதிய திட்டங்கள் போன்றவை சந்தை தேவையை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றலாம். அதனால் நில முதலீட்டிற்கான சரியான நேரம் மற்றும் பொறுமை என்பது மிகவும் அவசியம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.
August 21, 2025 10:01 AM IST

