அமெரிக்கா இந்தியா மீது 25 சதவிகித வரி விதித்ததில் இருந்து, அமெரிக்கா – இந்தியா உறவில் சற்று விரிசல் விழுந்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியாவைத் தொடர்ந்தும், இன்னமும் விமர்சித்து வருகிறது அமெரிக்கா.
இந்த நிலையில், இந்தியாவின் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நிக்கி ஹேலி.
இவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கட்சியான குடியரசுக் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
அமெரிக்க செய்திதாள் ஒன்றிற்கு அவர் எழுதியுள்ள கட்டுரையில், “அமெரிக்கா சீனாவைப் போல, இந்தியாவை எதிரியாக கருதக்கூடாது.
ட்ரம்பின் அரசாங்கம் வணிக வரிகளையோ, இந்தியா – பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தையையோ, உலகின் மிகப்பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளான இந்தியா, அமெரிக்கா உறவில் விரிசல் உருவாக்க விடக்கூடாது.

இந்தியா ‘இப்படி’ நடத்தப்படக்கூடாது!
அமெரிக்காவின் வெளியுறவுத் துறை கொள்கைகளை முழுமையாக்கவும், சீனாவிற்கு சவாலாக அமையவும், வலிமை மூலமாக அமைதியை நிலைநாட்டவும், ட்ரம்ப் அரசாங்கம் அமெரிக்கா – இந்திய உறவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான மற்றும் ஜனநாயக கூட்டாளியாக கருத வேண்டும். ரஷ்யாவில் இருந்து அதிக அளவு எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்படும் வரிகளில் இருந்து தப்பிக்கும் சீனாவைப் போல, இந்தியா நடத்தப்படக்கூடாது.

