Last Updated:
மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 9,700 கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடுத்தர குடும்பங்கள், சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கு தீபாவளி போனசாக ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி தற்போது உள்ள 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்ற வரி அடுக்குகளை 5, 18 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் ஆடம்பரப் பொருட்களுக்கான வரியை 40 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டுக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டம் டெல்லியில் பிகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.
அப்போது, மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு பரிந்துரைத்ததாகத் தெரிகிறது. அப்போது பேசிய தெலங்கானா அமைச்சர் மல்லுபாட்டி, காப்பீடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டால், அதன் பலன் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்றார். மருத்துவ, ஆயுள் காப்பீடுகளுக்கு தற்போது 18 சதவிகிதம் வரி விதிக்கப்படும் நிலையில், வரிவிலக்கு அளிக்கப்பட்டால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 9,700 கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பை தமிழ்நாடு அரசு வரவேற்பதாகவும், அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
August 21, 2025 8:51 AM IST

