பணம் கட்டி ஆடும் அல்லது பரிசுத் தொகை வழங்கப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதன் மூலம் Dream 11 போன்ற விளையாட்டுகளுக்கு திரை போடப்படுகிறது.
நாடெங்கும் ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டங்களுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில், அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகின்றன. அத்துடன், ஆன்லைன் சூதாட்ட கேம்கள் வாயிலாக அந்நிய பணப் பரிவர்த்தனை மோசடிகள் மற்றும் நிதி முறைகேடுகளும் தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளன.
மேலும், ஆன்லைன் கேம்களில் கிரிப்டோ கரன்சி மூலம் முறைகேடான பணப்பரிவர்த்தனைகள் நடப்பதும், பயங்கரவாதச் செயல்களுக்கு ஆன்லைன் கேமிங் துறை மூலம் நிதி பகிரப்படுவதும் மத்திய அரசின் கவனத்திற்கு வந்தது. இவற்றை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற மக்களவையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் விளையாட்டு கட்டுப்பாடு மற்றும் அபிவிருத்தி மசோதாவை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார்.
இதன்படி, இ-ஸ்போர்ட்ஸ், சோஷியல் கேமிங், பணம் வைத்து விளையாடும் கேம்கள் மற்றும் கல்வி தொடர்பான ஆன்லைன் விளையாட்டுகளைக் கண்காணிக்க புதிய அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் கட்டி விளையாடவோ, பரிசுத் தொகை வழங்கவோ தடை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. ஆன்லைனில் பணம் கட்டி ஆடும் ஆட்டங்கள் தொடர்பான பரிவர்த்தனைகளை பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கையாளவும் தடை விதிக்கப்படுகிறது.
சட்டத்தை மீறி யாராவது ஆன்லைன் சூதாட்டம் அல்லது பணம் செலுத்தி விளையாடும் ஆட்டங்களை நடத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது 1 கோடி ரூபாய் வரை அபராதமோ விதிக்கப்படும். பணம் செலுத்தி விளையாடும் ஆட்டங்களை விளம்பரப்படுத்தினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறி சட்டமாகும் பட்சத்தில் டிரீம் 11, ரம்மி சர்க்கிள், மை சர்க்கிள் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் செயல்படமுடியாமல் போகும், கிரிக்கெட் விளையாட்டுக்கும், பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஸ்பான்ஸர்ஷிப் பறிபோகும்.
முன்னதாக இந்த மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள ஆன்லைன் கேமிங் சங்கத்தினர், ஆன்லைன் கேமிங் தடை மூலம் 400 நிறுவனங்கள் மூடப்பட்டு 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். எனினும் வெறும் விளையாட்டுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இ-ஸ்போர்ட்ஸ் துறை ஏற்றம் பெற வழிவகுத்துள்ளதாக அத்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
August 21, 2025 6:36 AM IST

