உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் ஹன்ஸ்ராஜ். இவர், ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர் பாஸில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இதற்காக, தனது மனைவி சுனிதா மற்றும் மூன்று குழந்தைகளுடன் அப்பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, கடந்த இரண்டு மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஹன்ஸ்ராஜ் தங்கியிருந்த வாடகை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு வந்த போலீசார், மொட்டை மாடியில் மூடப்பட்டிருந்த நீல நிற டிரம்மில் இருந்து துர்நாற்றம் வருவதை உறுதி செய்தனர். பின்னர், அருகில் சென்று அதை திறந்து பார்த்தபோது போலீசாரே பதறியுள்ளனர்.
அதற்குள் கொலை செய்யப்பட்ட ஆணின் உடலை உப்புத் தூவி அடைத்து வைத்திருந்ததால் ஆடிப்போயுள்ளனர். உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டது வாடகை வீட்டில் தங்கியிருந்த கூலித் தொழிலாளி ஹன்ஸ்ராஜ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஹன்ஸ்ராஜின் மனைவி மற்றும் குழந்தைகள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், இரண்டு நாட்களாக அந்த வீட்டு ஓனரின் மகன் ஜிதேந்திராவும் எஸ்கேப் ஆனது உறுதியானது. பின்னர், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியபோது, ஹன்ஸ்ராஜின் மனைவி சுனிதா மற்றும் ஜிதேந்திராவும் திஜாரா பகுதியில் பதுங்கியிருந்ததை கண்டு பிடித்தனர்.
சந்தேகத்தின்பேரில் அவர்களை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கூலித் தொழிலாளியான ஹன்ஸ்ராஜ், மது போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். இதை பயன்படுத்தி வீட்டு ஓனரின் மகனான ஜிதேந்திராவும் அவருடன் சேர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஹன்ஸ்ராஜின் மனைவி சுனிதாவுடன் ஜிதேந்திரா நெருக்கி பழகியுள்ளார்.
இந்த பழக்கம் நாளடைவில் முறைதவறிய உறவாக மாறியுள்ளது. இந்த சூழலில் தான், இவர்கள் இருவரும் சேர்ந்து, மது போதையில் இருந்த ஹன்ஸ்ராஜை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், உடலை டிரம்மில் வைத்து அடைத்து விட்டு குழந்தைகளுடன் தப்பியோடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுனிதா மற்றும் ஜிதேத்திராவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில், கடற்படை அதிகாரியை, அவரின் மனைவியே ரகசிய காதலனுடன் சேர்ந்து கொன்று, டிரம்மில் அடைத்து வைத்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அண்மையில், முறை தவறிய உறவால் கணவனை, மனைவியே தனது ரகசிய காதலனுடன் சேர்ந்து பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்தது குலைநடுங்க வைத்தது. இந்நிலையில் மீண்டும் மீரட் சம்பவத்தை மிஞ்சும் அளவிற்கு கணவனை, மனைவியே, தனது காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்து, உடலை உப்பு தடவி டிரம்மில் அடைத்து வைத்தது ராஜஸ்தானை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
August 20, 2025 3:02 PM IST

