Last Updated:
ஸ்வீடனின் கிர்ணா நகரில் 1912-ல் கட்டப்பட்ட தேவாலயத்தை 5 கிலோமீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணிகள் தொடங்கியுள்ளன. சுரங்கம் காரணமாக விரிசல் ஏற்பட்டதால், தேவாலயத்தை நகர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நம்மூரில் கட்டிடத்தை சிறிது தூரத்துக்கு நகர்த்தியிருப்பதை பார்த்திருப்போம்… ஆனால், ஸ்வீடனில் தேவாலய கட்டடத்தை அப்படியே 5 கிலோமீட்டர் தொலைவுக்கு நகர்த்தி வருகின்றனர்.
ஸ்வீடனில் உள்ள கிர்ணா நகரில் உலகின் மிகப்பெரும் இரும்புத்தாது சுரங்கம் அமைந்துள்ளது. 1910-களிலிருந்து இந்த சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கம் நகரையே விழுங்கிவிடும் என்று அஞ்சப்படுகிறது. அண்மைக்காலமாக சாலைகள் மற்றும் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், நகரில் உள்ள மக்களை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், 1912-ல் மரத்தால் கட்டி முடிக்கப்பட்ட தேவாலயத்தையும் இடம் மாற்ற முடிவுசெய்யப்பட்டது. சிறந்த கட்டடமாக மக்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த கட்டடத்தை எந்தவொரு சேதமுமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேவாலயத்தை அப்படியே 5 கிலோமீட்டர் தொலைவுக்கு நகர்த்திச் செல்லும் பணிகள் நேற்று தொடங்கின. அதிநவீன கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கட்டடம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அதிக எடையிலான சக்கரம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் வழியாக தேவாலயம் நகர்த்தப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் கட்டடம் முழுமையாக நகர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
August 20, 2025 6:41 PM IST
தேவாலயத்தை அலேக்காக 5 கிலோமீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் மக்கள்.. ஸ்வீடனில் அதிர்ச்சி!


