Last Updated:
என்சிஆர்டி, ஆபரேஷன் சிந்தூர் பற்றிய புதிய பாடத்தொகுப்பை உருவாக்கியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் எனப்படும் என்சிஆர்டி புதிய பாடத்தொகுப்பை தயாரித்துள்ளது.
அந்தப் பாடத் தொகுப்பில், 2019ஆம் ஆண்டு நடந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியானது, அதன்பிறகு பிப்ரவரி 26, 2019 அன்று பாலகோட்டில் மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது முகாமை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியது உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
ஜம்மு & காஷ்மீரில் 370 சட்ட நீக்கத்தின் மூலம் அங்கு அமைதி மற்றும் மேம்பாடு ஏற்பட்டுவருவதாகவும், சுற்றுலா அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 370 நீக்கத்திற்கு பிறகு அங்கு அமைதி நிலவுவதை பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22, 2025ஆம் ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு நேபாள குடிமகன் உட்பட 26 நபர்கள் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில் சவுதி அரேபிய பயணத்தில் இருந்த பிரதமர் மோடி உடனடியாக நாடு திரும்பியதாகவும், பயங்கரவாத நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார் என்றும் இடம் பெற்றுள்ளது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7ஆம் தேதி அதிகாலை 1.05 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாத தாக்குதலில் குங்குமத்தை இழந்த கைம்பெண்களுக்காக இந்த ஆபரேஷனுக்கு சிந்தூர் என பெயரிடப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆபரேஷனில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் பாடத்தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகு, ஜூலை 2025 இல் அமெரிக்கா TRF ஐ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது எனவும் பாட தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
August 20, 2025 5:43 PM IST
மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் பாடம்… தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் எடுத்த நடவடிக்கை


