Last Updated:
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் களம் காணும் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை கடந்த மாதம் 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வுசெய்வதற்கான தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், போட்டி இருந்தால், அடுத்த மாதம் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளபோதிலும் அதை எதிர்த்து களம் இறங்குவது ஜனநாயகக் கடமை என காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. அதனால் பொருத்தமான வேட்பாளரைத் தேர்வு செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில், காங்கிரஸ் கட்சி அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, திருச்சி சிவா, திரிணமுல் காங்கிரசின் டெரிக் ஓ ப்ரைன் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த ஒருவர் அல்லது சசி தரூரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
சந்திரயான் திட்ட இயக்குநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான மயில்சாமி அண்ணாதுரையின் பெயர் பரிசீலிக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று மாலை, கார்கேவின் இல்லத்தில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உறுதியான முடிவு எட்டப்படாத நிலையில் இன்று பகல் 12.30 மணிக்கு மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் முடிவடையவுள்ள நிலையில், இன்று இறுதியான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கும்படி ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. இதேபோன்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டும் ராஜ்நாத் சிங் ஆதரவு திரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
August 19, 2025 6:55 AM IST
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர் யார்? லிஸ்டில் இருக்கும் டாப் பெயர்கள்


