Last Updated:
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, டிரம்ப்பை சந்திக்க முன், ஐரோப்பிய ஒன்றியத்தலைவர் உர்சுலா வான்டர்லைனை சந்தித்து, உக்ரைனின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு உறுதி பெற்றார்.
அமெரிக்காவில் டிரம்ப்பை இன்று சந்திக்க உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதற்கு முன்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அண்மையில் அலஸ்காவில், ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்த டிரம்ப், போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இறங்கி வர வேண்டும் என்ற ரீதியில் டிரம்ப் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்-ஐ உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்திக்கிறார். அதற்கு முன்பாக, பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றியத்தலைவர் உர்சுலா வான்டர்லைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உக்ரைனின் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கும் என்று உர்சுலா வான்டர்லைன் உறுதி அளித்துள்ளார். மேலும், டிரம்ப் உடனான சந்திப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள், நேட்டோ நாடுகள் பங்கேற்கும் என்றும் உர்சுலா குறிப்பிட்டுள்ளார்.
August 18, 2025 7:20 PM IST


