Last Updated:
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்து டெல்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை நடத்தின.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்து டெல்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை நடத்தின.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை கடந்த மாதம் 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வுசெய்வதற்கான தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், போட்டி இருந்தால், அடுத்த மாதம் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார். ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
வேட்புமனுத் தாக்கல் நிறைவடைவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ’இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தின. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாலையும் இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதனிடையே, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கும்படி ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. இதேபோன்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டும் ராஜ்நாத் சிங் ஆதரவு திரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
August 18, 2025 1:39 PM IST


