Last Updated:
நாட்டிலேயே மழலையர் பள்ளி மாணவர்களுக்கு சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்கும் முதல் மாநிலமாக ராஜஸ்தான் இருக்கிறது.
2023ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி ராஜஸ்தானில் ஆட்சி அமைத்த பாஜக, அம்மாநிலத்தில் மழலையர் வகுப்பு பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாகக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுக்க அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதில் உள்ள மும்மொழி கொள்கை உள்ளிட்ட பல விவகாரங்களுக்கு தமிழ்நாடு அரசு உட்பட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு நிலவி வருகிறது.
தமிழ்நாடு அரசு தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததன் காரணமாக கல்விக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க மறுக்கிறது. இதற்கு எதிராக திமுக உள்ளிட்ட தமிழ்நாடு அரசியல் கட்சிகள் குரல் கொடுத்துவருகின்றன.
இதேபோல், மகாராஷ்டிராவிலும் மும்மொழி கொள்கைக்கு பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மாணவர்கள் மூன்றாவது மொழியாக இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால், இது மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயல் என பல்வேறு மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சமீபத்தில் பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் இந்திய மொழியை மூன்றாவது மொழியாக அறிமுகம் செய்தது. இதற்கு அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சிகளும், இயக்கங்களும், செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த முடிவில் இருந்து மகாராஷ்டிரா அரசு பின்வாங்கியது.
இந்நிலையில் தான் 2023ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி ராஜஸ்தானில் ஆட்சி அமைத்த பாஜக, அம்மாநிலத்தில் மழலையர் வகுப்பு பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாகக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தானில் மழலையர் பள்ளிகளில் Pre-KG, LKG, UKG வகுப்பு மாணவர்களுக்கு சமஸ்கிருத மொழிப் பாடத்தை கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு NCERT ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு முதல் இத்திட்டத்தை ராஜஸ்தான் அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, நாட்டிலேயே மழலையர் பள்ளி மாணவர்களுக்கு சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்கும் முதல் மாநிலமாக ராஜஸ்தான் இருக்கும்.
August 15, 2025 6:00 PM IST
மழலையர் பள்ளி மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கட்டாய பாடம்! நாட்டிலேயே இந்த மாநிலம் தான் முதலில் அமல்படுத்துகிறது


